Description
விநாயக தாமோதர சாவர்க்கர் சுதந்திரப் போராட்ட வேள்வியில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர். சிறு வயது முதலே தேசபக்தர். இங்கிலாந்தில் சட்டம் படிக்கச் சென்றபோது, மதன்லால் திங்ரா, ஆனந்த் லட்சுமண் கான்ஹரே போன்ற எண்ணற்ற இளைஞர்களை தியாகிகளாக மாற்றியவர். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக அந்தமான் சிறையில் 10 ஆண்டுகளும், ரத்னாகிரியில் 13 ஆண்டுகளும் சிறைவாசம் அனுபவித்தவர். அந்தமான் சிறையில் அவரும், மற்ற பல கைதிகளும் இருளில் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டது, கை, கால்களில் இரும்புக் குண்டுகளைக் கட்டி வெகு நேரம் நிற்க வைக்கப்பட்டது, செக்கில் மாட்டுக்குப் பதிலாக கைதிகளைப் பயன்படுத்தியது, செக்கிழுக்கும்போது சோர்வடைந்தவர்களுக்குப் பிரம்படி கொடுக்கப்பட்டது, மலம் கழிக்கக்கூட நிபந்தனைகள் விதிக்கப்பட்டது போன்ற கொடுமைகளைப் படிக்கும்போதே இதயம் கனக்கிறது. அவரது சகோதரர்கள் இருவரும் கூட பல ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர்கள். அவர்களது குடும்பச் சொத்தும் ஜப்தி செய்யப்பட்டது. இவ்வளவு இன்னல்களுக்கு மத்தியிலும், அவர் 1857 முதல் சுதந்திரப் போர், இத்தாலியின் ஜோசப் மாஜினி, சீக்கியர்களின் வரலாறு உள்ளிட்ட பல புத்தகங்களை எழுதி தேசபக்தி ஊட்டினார். கவிஞரும் கூட. அந்தமான் சிறையில் ஏராளமான கவிதைகளை எழுதினார். இந்திய இளைஞர்கள் ராணுவத்தில் அதிக அளவில் சேர வேண்டும் என்பதை எப்போதும் வலியுறுத்தியவர். இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு எத்தனையோ பேர் மிகப் பெரிய தியாகங்களைச் செய்துள்ளனர். அதில் ஒரு சிறு பகுதியை எடுத்தியம்பும் நூல். இன்றைய இளைஞர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல்.