Description
சென்னை கம்பன் கழகம் சார்பாக இந்த வருடம் நடந்த ஏ.வி. மெய்யப் செட்டியார் நினைவுதின நிகழ்ச்சியில் கிழக்கும் மேற்கும் என்ற தலைப்பில் இந்நூலாசிரியர் ஆற்றிய திறனாய்வு சொற்பொழிவின் நூல் வடிவமே இது.கம்பனும், மில்டனும், பாரதியும் ஷெல்லியும் போன்ற இலக்கியத் தரம் வாய்ந்த திறனாய்வு நூல்கள் ஒரு சில வந்தாலும் கூட, ஒப்பிலக்கியத் திறனாய்வு என்பது இன்னமும் தமிழில் போதிய வளர்ச்சி பெறவில்லை என்ற நிலையே உள்ளது.இந்தச் சூலில் இந்நூலாசிரியரின் இந்நூல் வரவேற்கத்தக்கது. கி.பி. 12ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் வாழ்ந்த கவிச்சக்ரவர்த்தி கம்பனையும், 16ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் வாழ்ந்த உலகப் புகழ் நாடக ஆசிரியர் வில்லியம் ஷேக்ஸ்பியரையும் ஒப்பிட்டு திறனாய்வு செய்துள்ளது இந்நூல்.கம்பனும், ஷேக்ஸ்பியரும் காலத்தாலும், இடத்தாலும், சமுதாயத்தாலும், மரபுகளாலும், வாழ்க்கை முறையாலும், சமயத்தாலும் முற்றிலும் வேறுபட்டவர்கள்.இத்தகைய பெரும் இடைவெளியுள்ள உலகப் புகழ்வாய்ந்த இவ்விரு மாமேதைகளையும் ஒப்பீடு செய்வது மிகவும் கடினமான காரியம். தவிர, அள்ள அள்ளக் குறையாத கலைக் கருவூலங்களைக் கொண்ட கம்பனின் பன்னீராயிரம் பாடல்களையும், அகில உலகத்தையும் தன் வசப்படுத்திய ஷேக்ஸ்பியரின் 37 ஆங்கில நாடகங்களையும் ஒரு நூலில் அடக்கி ஒப்பீடு செய்வது என்பது அசாத்தியமானது.ஆயினும் முனைவரும் பேராசிரியருமான இந்நூலாசிரியர், தனது முயற்சியில் வெற்றியை நோக்கி பயணித்துள்ளதை இந்நூலில் அறிய முடிகிறது. தமிழ் இலக்கிய உலகை முன்னெடுத்துச் செல்ல இதுபோன்ற முயற்சிகள் அத்தியாவசியமானவை.-பரக்கத்.நன்றி: துக்ளக், 6/11/2013.