Description
இந்த நாவலில் இரண்டு இடங்களில் என்னை மீறிய ஒரு சக்திக்குப் பங்குண்டு.அது என் ஆழ்மன எண்ண வெளிப்பாடா, இல்லை ஏதோ ஒரு வெளிசக்தியா என்று எனக்குத் தெரியாது.ஆனால் அதை வாசகர்களுக்குத் தெரிவிப்பது நியாயமாக இருக்கும் என்பதால் தெரிவிக்கிறேன்.ஒன்று விசேஷ மானஸ லிங்கம் குறித்த ஓலைச்சுவடிகளில் ஒரு செய்யுள் போன்ற வரிகளை எழுதினால் நன்றாக இருக்கும் என்று நினைத்தபடி ஒரு நாள் இரவு உறங்கினேன். மறு நாள் காலை செய்யுள் தயாராக என் மனதில் இருந்தது. கதைக்குப் பொருத்தமாய் ஒரு மாபெரும் உண்மையை உள்ளடக்கியதாய் அந்த இருவரிச் செய்யுள் வந்தது எப்படி என்று இன்னும் எனக்கு திகைப்பாகவே இருக்கிறது.இன்னொன்று விசேஷ மானஸ லிங்கத்தின் முடிவு. நான் ஆரம்பத்தில் வேறொரு முடிவைத் தான் எண்ணி வைத்திருந்தேன்.கடைசி நேரத்தில் ஒரு நாள் கனவாய் வந்து மறைந்த காட்சி தான் இந்த நாவலில் விசேஷ மானஸ லிங்கத்தின் கடைசிக் காட்சியாக மாறி விட்டது. விசேஷ மானஸ லிங்கம் கடைசிக் காட்சியில் தன்னை அப்படி எழுதி முடிக்க என்னைப் பணித்ததோ என்று பிரமிப்பும் கூட எனக்கு மிஞ்சுகிறது