Description
அருமையான 30 கட்டுரைகள். அதிலும் நான்கு பிரிவாக ஆளுமையும், ஆக்கங்களும், மதிப்பீடுகளும் எதிர்பார்ப்புகளும் படைப்பாளிகளும் படைப்புகளும், சமூக அரசியல் சிந்தனைகளும்) பிரித்து கொடுத்திருக்கிறார்கள்.சிறந்த எழுத்தாளர்களின் அனைத்து எழுத்துகளுமே சிறப்பாகத்தான் இருக்கும். அதிலும் சிறப்பானவற்றை காலத்திற்கு ஏற்றாற்போல தேர்வு செய்துள்ள தில்லைநாயகத்தைப் பாராட்ட வேண்டும்.அகிலனின் சித்திரப் பாவைக்கு ஞானபீடப் பரிசு கிடைத்தது தொடர்பான கட்டுரை, தமிழகத்தில் யார் விருது பெற்றாலும், ஒருமுறை எடுத்துப் படிக்க வேண்டிய அற்புதமான, நேர்மையான, தலையில் ஆணி அடித்தாற்போன்ற கட்டுரை. இத்தகைய கட்டுரையை சாகித்ய அகாதெமி வெளியீட்டிலேயே சேர்த்துவிட்ட தில்லைநாயகத்தின் சாதுர்யம் புன்னகையை வரவழைக்கிறது.(திருநெல்வேலிக்கே அல்வா?) சுந்தர ராமசாமி குறித்து இதுவரை அறிமுகம் இல்லாத ஒரு வாசகர் இந்த புத்தகத்தைப் படித்தாரெனில் அவர் பித்துப் பிடித்ததுபோல அவருடைய அனைத்து படைப்புகளையும் தேடிப் படிக்கச் செய்யும் தூண்டுகோலாக இந்த புத்தகம் இருக்கும் என்பது உறுதி.