Description
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு வீடு வாசல் நிலபுலம் எல்லாம் தந்துவிட்டு, வேறுவேறு ஊர்களில் குடியேறி வந்தாரங்குடியாய் வாழ நேர்ந்த மக்களின் வாழ்க்கைப் போராட்டங்களை அப்படியே அசலாய்ப் படம் பிடித்திருக்கிறது கண்மணி குணசேகரனின் இந்த நாவல்.குருவிகளின் சிலும்பல்கள், கொட்டப்புளிகளின் கெக்களிப்புகள் இணைகளோடும் குஞ்சுகளோடும் கூடுகள் தோறும் விடியல் ஒலிகள், ஏகத்துக்குமாய் பச்சைப் பசேல் என்று விரிந்த கம்மங்கொல்லைகள், தாய்மடி போல் இம்மண், உயிர்களை ஊட்டி வளர்க்கும் பரிவு-இந்த அறிமுகத்தோடு வேப்பங்குறிச்சி கிராமத்துக்கு நம்மை அழைத்துச் செல்கிறார் நாவலாசிரியர்.இந்த நாவலின் கதை மாந்தர்கள் அரிதாரம் பூசிக் கொள்ளாமல் இயல்பான முகங்களோடு உலா வருகிறார்கள்.ஆழமாக வேர் ஊன்றி அகலமாய் கிளை பரப்பி தம் மண்ணோடு ஓன்றிவிட்ட மக்களின் வாழ்க்கை முறையினை, விறுவிறுப்பாக மண்வாசனை கமழ எழுதியுள்ளது மட்டுமின்றிச் சமகால சமூக, அரசியல் நிகழ்விகளையும் போராட்டங்களையும் தயக்கமின்றி நாவல் ஆசிரியர் பதிவு செய்துள்ளார்.தமிழ் நாவல் உலகில் வந்தாரங்குடிக்கு நிரந்த இடம் உண்டு. இந்நாவல் விருதுகளால் கௌரவிக்கப்பட வேண்டியது என்று சொன்றால் அது மிகையில்லை