Description
பழந்தமிழர் வீரத்துக்கும் உடல் வலிமைக்கும் அடிப்படைக் காரணம் அவர்கள் மேற்கொண்ட உணவு முறைகள்தான். சிறுதானியங்கள் பழந்தமிழர் வாழ்வில் பின்னிப் பிணைந்திருந்தன. அவர்கள் பயிர் வகைகளை நன்செய், புன்செய் என்ற இரு பிரிவுகளாகப் பிரித்துவைத்திருந்தனர். தண்ணீர் அதிகம் தேவைப்படும் பயிர்கள் நன்செய். மானாவரி அல்லது குறைந்த நீர் தேவையுள்ள பயிர்கள் புன்செய். புன்செய்ப் பயிர்கள்தான் சிறுதானியங்கள். கம்பு, தினை, கேழ்வரகு, வரகு, குதிரைவாலி, சாமை, சோளம், காடைக்கண்ணி, உளுந்து போன்றவை உடலுக்குச் சக்தியையும், நோயற்ற வாழ்வையும் அருள்கின்றன. கம்பு உருண்டை, உளுத்தங் களி, கேப்பைக் களி போன்றவை சில சிறுதானிய உணவுகள். கம்பங் கூழ், வரகரிசிச் சோறு, கம்பு தோசை, தேன் கலந்த தினை மாவு போன்றவை முற்காலத்தில் தமிழர்களின் உணவுகள். ஆனால், தற்காலத்தில் சிறுதானியங்களைக் கொண்டு விதவிதமான உணவைச் சமைக்கும் பழக்கம் குன்றிவிட்டது. அரிசியைப் பயன்படுத்தும்போது, அதிலுள்ள உயிர்ச் சத்துகள் பலவிதங்களில் நீக்கப்பட்டுவிடுகின்றன. ஆனால், சிறுதானியங்களைப் பயன்படுத்தும்போது அதிலுள்ள உயிர்ச் சத்துகள் காக்கப்படுகின்றன. சிறுதானிய உணவுகள் ஆறு மாதக் குழந்தை முதல் முதியோர் வரை யாவரும் உண்ண உகந்தவை. கேழ்வரகு, கம்பு போன்ற தானியங்கள் குருதியில் உள்ள ட்ரைகிளிசிரைட்ஸ் மற்றும் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. ஆஸ்துமா நோய் உள்ளவர்களுக்கு இளைப்பைக் குறைக்க உதவுகின்றன. செரிமானம் எளிதில் நடைபெறுகிறது. இத்தகைய அற்புதங்கள் வாய்ந்த சிறுதானிய உணவுகளே சமுதாயத்தின் இப்போதையத் தேவை. ‘சிறுதானிய உணவுகள் என்றால் கூழாகவோ, கஞ்சியாகவோதான் சாப்பிட வேண்டும். இதில் எந்தச் சுவையும் இல்லை’ என்ற நிலையை மாற்றி, சிறுதானிய உணவு வகைகளில் மணம் கமழும் சிற்றுண்டி வகைகளை எளிதாகச் சமைத்துச் சாப்பிடலாம் என்ற புதிய வழிகாட்டியை இந்தப் புத்தகத்தின் மூலம் வடித்துள்ளார் நூல் ஆசிரியர் செஃப் க.ஸ்ரீதர். செயற்கை மணமூட்டிகளும் சுவை கூட்டிகளும் இல்லாத உயிர்ச்சத்து நிறைந்த, மனதுக்கு இனிய, மகத்துவம் அளிக்கும் சிறுதானிய உணவு வகைகளை இந்த நூலின் மூலம் தமிழ்ச் சமுதாயத்துக்கு அளித்திருக்கிறார் நூல் ஆசிரியர். பக்கவிளைவுகள் இல்லாத, வயிறைக் கெடுக்காத வகை வகையான சிறுதானிய உணவுகளை அறிய பக்கத்தை புரட்டுங்கள்... நூறாண்டு வாழுங்கள்!