Description
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஊர் உவரி. இங்குதான், உலகப் புகழ்பெற்ற ஒபீர் துறைமுகம் ஒரு காலத்தில் இருந்தது என்றும் பின்பு தூர்ந்து மறைந்தது என்றும் சாலமன் மன்னன் வாழ்ந்த காலத்தில் பினிசிய மாலுமிகள் அவனுக்காக ஒபீர் துறைமுகத்திலிருந்து சந்தனக் கட்டைகள் உள்ளிட்ட பல்வேறு பொருள்களை வாங்கிச் சென்றதாகவும் வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.அந்தவகையில், ஒபீர் துறைமுகம் இங்குதான் இருந்தது என்பதை பல்வேறு இலக்கியச் சான்றுகள், கல்வெட்டுகள், விவிலியத்தில் உள்ள செய்திகள், தமிழ்ச் சொற்களுக்கும் உலகின் பல்வேறு மொழிகளில் உள்ள சொற்களுக்குமிடையேயான தொடர்பு போன்றவற்றை வலுவான ஆதாரங்களாகக் கொண்டு நிரூபிக்க முயல்கிறார் நூலாசிரியர்.இதன் மூலம், உலகில் உள்ள பல்வேறு மொழிகளுக்கு தமிழ்ச் சொற்களே வேர்ச் சொற்களாக உள்ளதையும், பல்வேறு ஊர்களின் பெயர்களில் தமிழ் மொழியின் தாக்கம் உள்ளதையும், தமிழர்களுக்கு மேற்கத்திய நாடுகளுடன் உள்ள தொடர்புகளையும் தெளிவாக ஆராய்ந்து விளக்குகிறார் நூலாசிரியர். பல்வேறுபட்ட செய்திகளையும் தொகுக்கும் முயற்சியில் அவரது கடின உழைப்பு வியக்க வைக்கிறது.வரலாற்று மாணவர்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் மிகவும் பயன்படும் நூல்