Description
தமிழின் பெருங்காவியமான கம்ப ராமாயணத்தை சற்று சுருக்கமாக, உரைநடை வடிவில் எழுதியுள்ளார் கிருபானந்த வாரியார்.
அயோத்தி மாநகரை ஆண்டு வந்த தசரத சக்கரவர்த்தி, தமது குலகுருவான வசிஷ்ட முனிவரிடம், தனக்கு மகப்பேறு இல்லாத குறையைக் கூறி வருந்த, வசிஷ்டர் அவர் புத்திர காமேஷ்டி யாகம் செய்தால் புத்திர பாக்கியம் கிட்டும் என்று கூற, அவ்வாறே தசரதர் யாகம் செய்ய, தசரதருக்குக் குமாரராக இராமர் பிறந்தார் என்று இராமரின்பிறப்பை விவரிப்பதில் தொடங்கி, சீதையின் பிறப்பு, அகலிகை வரலாறு, இராமர்-சீதை திருமணம், இராமர் வனம் புகுதல், அநுமன் அறிமுகம், கணையாழி, இராவணன் ஆலோசனை, மாயா சீதை, இராம-இராவண யுத்தம், திருமுடி சூட்டுதல் உள்ளிட்ட 35 தலைப்புகளில் கம்ப காவியம் சுவைபட விவரிக்கப்பட்டுள்ளது.
கம்ப ராமாயணத்துக்கு பலரும் விளக்கவுரை எழுதியிருக்கிறார்கள் என்றாலும், இத்துணை எளிமையாகவும் சுவையாகவும் வேறு எவருடைய உரையும் அமையவில்லை என்பதே இந்நூலின் தனிச்சிறப்பு. அது மட்டுமல்ல, சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைக் கொண்ட கம்ப ராமாயணத்திலிருந்து சுமார் 130 பாடல்களைத் தேர்ந்தெடுத்திருக்கும் நூலாசிரியரின் தேர்வு பிரமிக்க வைக்கிறது.
மேலும், கம்ப ராமாயணப் பாடல்களை மட்டும் எடுத்துக் கொள்ளாமல், மேற்கோள்களாக திருக்குறள், திவ்ய பிரபந்தம், திருப்புகழ், பன்னிரு திருமுறை போன்றவற்றிலிருந்தும் பாடல்களை எடுத்துக்காட்டியிருப்பது நூலாசிரியரின் நுண்மாண் நுழைபுலத்திற்கோர் உரைகல்.
இதிகாசத்தையும் எல்லாருக்கும் புரியுமாறு எழுத முடியும் என்பதை இந்நூல்வழி மெய்ப்பித்திருக்கிறார் திருமுருக கிருபானந்த வாரியார்.