Description
சித்தர்கள் என்பவர் யார், அவர்கள் வாழ்க்கையின் நோக்கம் என்ன என்பதைப் பற்றி இந்த நூலில் எழுதியிருக்கிறார் நூல் ஆசிரியர் இந்திரா சௌந்தர்ராஜன். சித்தர்களின் வாழ்க்கை வரலாறு, அவர்கள் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள், செய்த அதிசயங்கள், மக்களுக்குச் செய்த நன்மைகள், மொத்தத்தில் ஆன்மிக வாழ்க்கைக்குச் செய்த நன்மைகள் ஆகியவற்றைச் சுவைபட எழுதியிருக்கிறார். எது சித்தம், எது சிவம், சிவமே சிவபெருமானாக வரும்போது என்ன வித்தியாசம் ஆகியவற்றைத் தெளிவாக எழுதியிருக்கிறார். ஆண்டவனான சிவபெருமானே சித்தனாக வந்து அருளிய திருவிளையாடல், பொன்னணையாளுக்கு பொன் கொடுத்தது, சித்தர்கள் ரசவாதம் செய்தது, கூடுவிட்டுக் கூடு பாய்ந்தது, நவபாஷாணத்தில் விக்கிரகம் செய்தது, ஆகாயத்தில் பறந்தது, சீன தேசத்துக்கு நொடியில் சென்றது போன்ற அதிசயங்களை எழுதியிருக்கிறார். கூடுவிட்டுக் கூடு பாய்ந்துவிட்டு பட்ட அவஸ்தைகளும் நூலில் இருக்கின்றன. கருவூரார், பாம்பாட்டி, கொங்கணர், தேரையர், பட்டினத்தார், புலிப்பாணி, மச்சமுனி, ரோமரிஷி, பிண்ணாக்கீசர், பிராந்தர், சிவவாக்கியர், சட்டைமுனி, திருமூலர், பதஞ்சலி முனிவர் ஆகியோரைப் பற்றி அனேக விஷயங்களை ஆழ்ந்து எழுதியிருக்கிறார். சித்தர்கள் நம்மைப்போல் லௌகீகத்தில் நாட்டம்கொள்ளவில்லை. நம்மைப் போன்ற மாந்தர்கள் சித்தர் வழியில் நடந்தாலும் அவர்கள் அடைந்த அஷ்ட மா சித்திகளில்தான் நமக்கு வசீகரம் அதிகம். ஆனால், சித்தர்களோ நமக்கு அதிசயமான, அமானுஷ்யமான இந்த அஷ்ட மாசித்திகளில் துளியும் ஆர்வமில்லாமல் முக்தி அடைவது ஒன்றிலேயே குறியாக இருந்தனர் என்றால் எவ்வளவு மனக் கட்டுப்பாடு உடையவர்களாக இருந்திருப்பார்கள்! சக்தி விகடனில் தொடராக வந்து பாராட்டைப் பெற்ற கட்டுரைகள் உங்கள் கைகளில் நூலாக இப்போது தவழ்கிறது. தமிழ்நாட்டில் வாழ்ந்த ஒரு சாராரான சித்தர்களைப் பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். அதற்கு இந்த நூல் பயன்படும்!