Description
கவிஞர் வாலியின் 'பாண்டவர் பூமி' பழைய கதை... புதிய நடை என்கிற புதிய முயற்சி. உரையிடையிட்ட செய்யுள் நடையாக உருவாகி வெற்றி பெற்ற படைப்பு. கவிதைக்குப் பொருள் முக்கியம் என்றாலும் நடைதான் அதன் கவர்ச்சிக்குக் காரணம். நடையைச் சொல் தீர்மானிக்கிறது. வாலிக்குச் சொற்கள் ஊழியம் செய்கின்றன. வீரமறவன் கம்பெடுத்துச் சிலம்பமாடுவதுபோல் கவிஞர் சொற்சிலம்பம் ஆடுவதில் சக்கரவர்த்தி. வில்லிபுத்தூராரே, பாரதம் பாடியது ஏன் என்று எழுதும்போது "இடையிடை மண்ணு மாதவன் சரிதை வழங்கலால்" என்று எழுதுவார். அதாவது கண்ணனை இடை இடை பாடி பக்திப் பரவசம் அடையமுடியும் என்பதே பாரதம் எழுதிய நோக்கமாம். கவிஞர் வாலி அவர்களும் கிருஷ்ண பக்தர். அவர் கண்ணன் குழலூதியதை எழுதும் அழகே அழகு. "ஞானமழை வழங்கும் / கானமழை கேட்டு / கறவை உறங்கும்/ பறவை உறங்கும்" என்று பெரியாழ்வார் பாடலை வழிமொழிகிறார். கம்பனுக்கு மகாபாரதம் எழுதும் பேறு வாய்க்கவில்லை. வில்லிக்கோ இராமாயணம் எழுதும் பாக்கியம் கிடைக்கவில்லை. கவிஞர் வாலிக்கோ இராமாயணம், மகாபாரதம் இரண்டையும் எழுதி காலம் காலமாய் நிற்கும் பேறு வாய்த்துவிட்டது என்றே சொல்லவேண்டும். மகாகவிகள் இருவருக்கும் வாய்க்காத அதிர்ஷ்டம் வாய்த்த வாலி அவர்கள் தமிழ் உள்ளவரை நிலைத்திருக்க இந்த எழுத்தோவியம் காரணமாக அமையும்.