Description
மொத்தமாக இருபத்தாறு தலைப்புகளில், மனிதனுக்கு ஏற்படக்கூடிய நோய்களைப் பற்றிய அறிமுகமும், அவை ஏன், எப்படி ஏற்படுகின்றன என்ற காரணங்களையும், ஒரு சில நோய்களுக்கு தடுப்பு முறைகளையும் அறிமுகப் படுத்துகிறது இந்நூல். இரத்தப் பரிசோதனை முதல் முதுமை வரையிலான விசயங்கள் சுலபமாக அனைவருக்கும் புரிந்திடக்கூடிய வகையில் எளிய நடையில் எழுதப்பட்டிருப்பது இதன் பலம்.திருநர் பற்றிய கட்டுரை மிக முக்கியமான பதிவு என்றுதான் சொல்லவேண்டும். நம் சமுதாயத்தில் திருநர்கள் நடத்தப்படும் விதம் மிகவும் கொடூரமானது. பெற்றோர்களே தன்னை வீட்டில் சேர்த்துக்கொள்ள மறுக்கிறார்கள் என்று எனது இரயில் பயணத்தின்போது ஒரு திருநங்கை என்னிடம் கூறினார். மனமுதிர்ச்சி அடைய இம்மாதிரியான அறிவியல் விளக்கங்கள் அதிகமாகப் பதியப்பட வேண்டும்.இன்று நம்மிடையே மிகவும் பரவலாக அச்சுறுத்திக் கொண்டிருக்கும் மாரடைப்பு, புற்றுநோய், குடிப்பழக்கம், புகைபிடித்தல் மற்றும் சிறுநீரகக் கல் போன்ற நோய்கள் சிறப்பாக விளக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அத்தியாயமும் வெவ்வேறு விதமான நோய்களைப் பற்றி விளக்குவதால் புத்தகத்தை எந்த இடத்தில் வேண்டுமானாலும் படிக்கலாம்.பிற்சேர்க்கையாக கலைச் சொல் அட்டவணை இணைப்பு, வார்த்தைகளுக்கு தவறான அர்த்தங்களை கற்பிதம் செய்துவிடாமலிருக்க செய்யப்பட்டிருக்கும் ஒரு நல்ல முயற்சி. மேலும், சொல்லப்பட்டிருக்கும் தகவல்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் விதமாக தக்க சான்றுகள் இணைக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது.மனித நோய்களை மிக நெருக்கமாக அறிமுகப்படுத்தியிருக்கும் இப்புத்தகம் அனைவரும் படிக்கவேண்டிய ஒன்று. இது நமக்காக, நம்மைப்பற்றி நாமே புரிந்துகொள்ள தமிழில் எழுதப்பட்ட ஒரு ஆவணம்.