Description
பத்திரிகையாளர் சமஸ், கடந்த பத்தாண்டுகளில் வெவ்வேறு தமிழ் வெகுஜன ஊடகங்களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. அரசியல், சூழலியல், வாழ்வியல், ஊடகம் என பல்வேறு தலைப்புகளில் எழுதப்பட்ட 84 கட்டுரைகள் இதில் அடங்கி உள்ளன.வெவ்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்ட கட்டுரைகளை ஒருசேர படிக்கும்போது, விமர்சனத்துக்குள்ளான வரலாற்றை படிப்பது போன்ற மனநிலை ஏற்படுகிறது.எங்களுக்கு என்ன தண்டனை குன்ஹா; வேலைக்காக வாழ்க்கையா; மன்னார்குடி ஏன் இப்படி ஆனது? கட்டுரைகள் வாசகனை குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்குகின்றன.அரசியல் அற்ற அரசியல், கவனித்துக் கொண்டிருக்கிறது வரலாறு, ஈழம் கனவிலிருந்து கட்டுரைகள், நம் சமூகத்தின் சட்டையை பிடித்து உலுக்குகின்றன.உடைபடும் சீழ்கட்டிகள், யாருடைய எலிகள் நாம், இதற்குத்தான் ஜெயித்தீர்களா ஜெயலலிதா கட்டுரைகள், வார்த்தைகளால் ஆன சவுக்கடி. பெரும்பாலான கட்டுரைகளில் அதிகார மையங்களக்க எதிரான குரல் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கிறது.அறிவுசார் சொத்துகள் அழிந்து போனால் நம் வரலாறே காணாமல் போகும் அபாயத்தை சமூகத்தில் விதைத்த கட்டுரை, இதற்குத்தான் ஜெயித்தீர்களா ஜெயலலிதா கட்டுரை.பார்ப்பானை ஒழித்துவிட்டால், ஜாதிகள் அழிந்துவிடுமா என்ற கட்டுரை, இந்த தொகுப்பின் உச்சம். ஒடுக்கப்பட்ட மக்களை அடக்கி ஆண்ட, இடைநிலை ஜாதியை சேர்ந்த ஒருவரின் அடிமனதில் இருந்து எழுதப்பட்டது இந்த கட்டுரை.இன்றைய நவீன உலகுக்கு தேவையானது. நவீன தொழில்நுட்பத்தையும் விழுங்கி ஏப்பம் விடும், ஜாதி பிரச்னைகளுக்கு தேவையானது. அதுவே, சமூகத்தில் சமநிலையை ஏற்படுத்த முடியும்.கட்டுரையில், எதிர்கால தலைமுறைக்கு வழி காட்டும் விதமாக, காந்தியையும் அம்பேத்கரையும் பெரியாரையும் படிக்க வைப்பேன் என்கிறார் கட்டுரையாளர். சமூகத்தின் அனைத்து துறைகளையும் விமர்சித்த நூலாசிரியர், இறுதியில் தன் ஊடகத்துறையையும் விமர்சிக்கத் தவறவில்லை.இது அபூர்வம். துறையின் உள்ளுக்குள் இருந்து கலகக்குரல் எழுப்புவது, ஊடகத்தில் சாத்தியமில்லை. ஆளுக்கொரு செய்தி ஜமாய் என்ற கட்டுரை மூலம், இந்திய ஊடகங்களின் மாற்று முகத்தை வெளிப்படுத்துகிறார். வெகுஜன இதழ்களுக்கும், சிற்றிதழ்களுக்கும் இடைப்பட்ட மொழிநடை கைவரப் பெற்றிருப்பதால், வாசகனை எளிதில் ஈர்க்கிறது.இருந்தாலும் நேர்மையான அரசு அதிகாரியின் மிடுக்கான குரல் போல் எப்போதும் வார்த்தைகள் விறைத்து கொண்டே நிற்கின்றன. வீரன் என்றால் எப்போதும் சண்டை போட்டுக் கொண்டேவா இருக்க வேண்டும் சமஸ்?