தி.ஜானகிராமன் சிறுகதைகள்


Author: தி. ஜானகிராமன்

Pages:

Year: 2014

Price:
Sale priceRs. 1,690.00

Description

தி. ஜானகிராமனின் சிறுகதை ஆளுமை செவ்வியல்தன்மை கொண்டது. அவரது ஆரம்பகாலக் கதைகளில் ஒன்றான ‘பசி ஆறிற்று’ முதல் கடைசிக் கதை ‘சுளிப்பு’வரையிலும் இந்தத் தன்மையைக் காணலாம். வடமொழி இலக்கியங்களில் பெற்ற அறிமுகம், தமிழ் இலக்கியங்களிலிருந்து பயின்ற விரிவு, பிறமொழி இலக்கியங்களிருந்து அடைந்த செய்நேர்த்தி இவை கதைகளின் புற வடிவத்தையும் காலங்காலமாகப் போற்றப்பட்ட மானுட மதிப்பீடுகள்மீது கொண்ட நம்பிக்கை ஆழத்தையும் நிர்ணயித்திருக்கின்றன. இந்தக் கூறுகளால் ஆன படைப்பு மனம் இயல்பாகவே ஒரு பூரிதநிலையை எட்டியிருந்தது. அதில் மேலதிகமாக எதையும் சேர்க்கவோ அல்லது எடுக்கவோ அனுமதிக்காத முழுமையை அந்த மனம் கொண்டிருந்தது. காற்றிலிருந்து ஈரத்தை உறிஞ்சிக்கொள்வதுபோலக் காலத்தின் கசிவை அந்தப் படைப்பாற்றல் உள்ளிழுத்துக்கொண்டு தன்னை நிரந்தரப் புதுமையாகவும் வைத்துக்கொண்டிருந்தது. இன்று வாசிக்கும்போதும் தி. ஜானகிராமனின் கதைகள் புதுமை குன்றாதவையாகவும் வாசகனை ஈர்க்கும் வசீகரத்தை இழந்துவிடாதவையாகவும் இருப்பது இந்த குணத்தால்தான்.

தி. ஜானகிராமன்

தி. ஜானகிராமன் (1921 - 1982) தி. ஜானகிராமன் தஞ்சை மாவட்டம் மன்னார்குடியை அடுத்த தேவங்குடியில் பிறந்தவர். பத்து வருடங்கள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர். பின்பு அகில இந்திய வானொலியில் பணியாற்றி ஓய்வுபெற்றார். கர்நாடக இசை அறிவும் வடமொழிப் புலமையும் பெற்றிருந்தவர். 1943இல் எழுதத் தொடங்கிய தி. ஜானகிராமன் ‘மோகமுள்’, ‘அம்மா வந்தாள்’, ‘மரப்பசு’ உள்ளிட்ட ஒன்பது நாவல்கள், நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், மூன்று நாடகங்கள், பயண நூல்கள் ஆகியவற்றை எழுதியிருக்கிறார். சிட்டியுடன் இணைந்து இவர் எழுதிய ‘நடந்தாய் வாழி காவேரி’ பயண இலக்கிய வகையில் முக்கியமான நூலாகக் கருதப்படுகிறது. ‘மோகமுள்’, ‘நாலு வேலி நிலம்’ ஆகிய படைப்புகள் திரைப்படமாக்கப்பட்டுள்ளன. ‘மோகமுள்’, ‘மரப்பசு’, ‘அம்மா வந்தாள்’ ஆகிய நாவல்களும் பல சிறுகதைகளும் இந்திய, ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. 1979இல் ‘சக்தி வைத்தியம்’ சிறுகதைத் தொகுப்பிற்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. பதிப்பாசிரியர்: சுகுமாரன் (பி.1957) கோவையில் பிறந்தவர். அச்சிதழ், தொலைக்காட்சி, நூல் வெளியீட்டுத் துறைகளில் பணியாற்றியவர். கவிஞர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர். இலக்கிய இதழ்களிலும் இணையத்திலும் தொடர்ந்து எழுதிவருகிறார். திருவனந்தபுரத்தில் வசிக்கிறார்.

You may also like

Recently viewed