பல்லவர், சோழர், விஜயநகர பேரரசு, போர்ச்சுக்கீசியர், பிரெஞ்ச் படையினர், டச்சுக்காரர்கள், பிரிட்டிஷ் படையினர் காலம் என பலக்கட்ட கலாசார மோதல்களையும் தாண்டி இன்று மதராஸ் 1996க்குப் பின் ‘சென்னை’யாக பெயர் மாறியிருக்கிறது. 375 ஆண்டுகளாக ஒரு நகரம் அங்குலம் அங்குலமாக கல்வியில், இலக்கியத்தில், இசையில், மருத்துவத்தில், வணிகத்தில், வாணிபத்தில், தொலைத்தொடர்பில், போக்குவரத்தில், கட்டுமானத்தில், நீதி பரிபாலனத்தில், ஆட்சி அதிகாரத்தில், நிர்வாக அமைப்புகளில், மக்கள் தொகைப் பெருக்கத்தில் எவ்வாரெல்லாம் விரிவடைந்துள்ளது என படம் பிடித்திருக்கிறது இந்தத் திரட்டு நூல். இப்படியான தொகை நூல்கள் நம் வரலாற்றுப் பிரக்ஞையை மேலும் வலுவாக்க உதவி செய்யும். அதற்காகவே இதைத் தமிழின் சிறந்த வரவாகக் கொள்ள வேண்டும் என்பேன். வரலாற்றில் படிப்படியாக வளர்ச்சியில் மிதந்த இந்நகரம் இறுதியில் பஞ்சத்தில் தவித்த காலமும் இருந்தது. ‘ஒரு ரொட்டித் துண்டுக்காக உயிரையே கொடுத்த காலம் உண்டு. ஆனால் ஒருவரும் வாங்கமாட்டார்கள்’ என பஞ்சத்தை பற்றி இந்தப் புத்தகத்தில் வரும் டி.எஸ்.எலியட்டின் அனல்மிகும் சொற்கள் அப்பஞ்சத்தை நேரடியாக நமக்கு உணர்த்த உதவலாம். - கடற்கரய் மத்தவிலாச அங்கதம்