Description
நினைத்துப் பார்க்க முடியாத வணிகமாகிவிட்டது கல்வி. ஒரு பிரமாண்ட தொழிற்சாலை நடத்துவதைக் காட்டிலும் இன்று லாபகரமானது பள்ளிக்கூடம் நடத்துவதே! அதனால்தான் மாநிலம் எங்கும் தனியார் பள்ளிகள் புற்றீசல்போல பெருத்துவிட்டன. மறுபக்கமோ அரசுப் பள்ளிகள் அவலத்திலும் அவலமாகக் கைவிடப்படுகின்றன. ‘நல்ல பள்ளிக்கூடம்’ என்ற வார்த்தையை உச்சரிக்கும்போதே, பெற்றோரின் மனதில் ஒரு தனியார் பள்ளிக்கூடத்தின் சித்திரம்தான் வந்துபோகிறது. ஏன் இந்த நிலை? அரசை விட தனியார் பிரமாண்டமானதா? தனியார் பள்ளிகளின் அதிவேக வளர்ச்சியும், அரசுப் பள்ளிகளின் அதலபாதாள வீழ்ச்சியும் தனித்தனியானதா? அரசுப் பள்ளிகளை மீட்கவே முடியாதா? ‘முடியும்’ எனில், அதற்கு என்ன செய்ய வேண்டும்? இந்தக் கேள்விகளுக்கு நடைமுறையில் இருந்து விடை அளிக்கிறார் பாரதி தம்பி. நமது கல்விச்சூழல் குறித்த அவ நம்பிக்கைகளை மட்டுமே விட்டுச் செல்லாமல், நம்பிக்கை தரும் அம்சங்களையும் தொட்டுச் செல்வதுதான் இந்த நூலின் சிறப்பு. ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தபோது ஏராளமான வாசகர்களின், ஆசிரியர்களின் வரவேற்பைப் பெற்ற இந்தக் கட்டுரைகள், தமிழகக் கல்விச்சூழலில் மிகப் பெரும் விவாதங்களையும் தூண்டியுள்ளன. கள ஆய்வு, புள்ளிவிவரங்கள், நிபுணர்களின் கருத்துகள் என கல்வி சார்ந்த அனைத்து அம்சங்களையும் தாங்கி வெளியாகும் இந்த நூல், பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று.