Description
முதலில் இந்தக் கதைகளை சிறுகதைகள் என்று சொல்லமுடியவில்லை. காரணம் சிறுகதைக்கான வடிவம் இதில் இல்லை. சின்ன சின்ன கதைகள் என்று சொல்லலாம் அல்லது மனதை நெகிழச்செய்யும் நிகழ்வுகள் என்று சொல்லலாம். ஒரு வெளிநாட்டில் வாழும் இந்தியருக்கு பலவிதமான நல்ல அனுபவங்கள், ஒப்பீட்டு சிந்தனைகள் தோன்றுவது இயல்பு. அவற்றை சிறுகதைகளாக மாற்ற முயற்சி செய்திருக்கின்றார் என்று நினைக்கின்றேன்.கதையில் வரும் கதாபாத்திரங்கள் நாம் பலகாலமாக கேட்டு சலித்த சமுதாயத்தின் மீதான சாடல்களை கிண்டலாக, வேதனையாக வெளிப்படுத்துகின்றன. அவற்றைப் படிக்கையில் எந்தவிதமான உணர்வும் ஏற்படவில்லை.இந்தப் புத்தகத்திலேயே எனக்கு மிகவும் பிடித்த கதை முடி. மற்ற கதைகள் அனைத்தும் ஏற்கெனவே படித்ததாகவோ அல்லது தெரிந்த விசயமாகவோ இருந்தன. ஆனால் இந்த முடி கதை புதியதாக இருந்தது. அது மட்டுமல்லாமல் தேவையில்லாத வர்ணனை, செயற்கையான புலம்பல்கள் இல்லாமல் கச்சிதமாக இருந்தது. முடி இல்லாதவர்கள் உண்மையில் எப்படி நடந்துகொள்வார்கள், அதை அப்படியே வெளிப்படுத்துவதாக இருந்தது. மறக்கமுடியாத கதையாக முடி கதை அமைந்திருந்தது.நாவல், சிறுகதைகள் மூலமாக ஒரு காலகட்டத்து வாழ்க்கையை அறிந்துகொள்ள முடியும். அதனால்தான் இலக்கிய வாசிப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன என்று எனது நண்பர் சொல்லியிருந்தார். இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது அவர்தான் ஞாபகத்திற்கு வந்தார். காரணம் இந்தப் புத்தகத்தின் மூலம் ஓரளவிற்கு வெளிநாட்டு வாழ்க்கையை, பிரச்சனைகளை, இழப்புகளை அறிந்துகொள்ள முடிகிறது.