Description
பாரத்வாஜரின் இந்த ராம ராவண யுத்தம் புதுமையான புதினம் எனக் கொள்ளலாம். மீண்டும் ராமாயணத்தை புதுக் கவிதை வடிவில் தந்திருப்பது ஒரு புதுமையே. ஆனால் இன்றைய தலைமுறையிடம் இது எந்த அளவிற்கு எடுபடும் என்பதை சற்று பொறுத்திருந்தே காண முடியும். பாரத்வாஜரின் இந்தப் புதினம் கொஞ்சம் அவரின் கருத்தை ஒட்டி அமைந்திருக்கலாம் என எண்ணுகிறேன். அவ்வளவு பெரிய மகா ராமாயணத்தை பல இடங்களில் சுருக்கி சின்னதாக்கி கொடுத்திருந்தாலும் சுவை குறையாமல் இருக்கிறது. இன்றைய காலத்திற்கு ஏற்றது போலவே அமைந்துவிட்டது எனலாம்.கதையை ராமனே திசை திருப்புவதாக ஆரம்பித்து நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கிறார் ஆசிரியர். வீணாக கூனியை சாடவில்லை, கைகேயியை குறை சொல்லவில்லை. ராமனே ராமாயணம் உண்டாகக் காரணம் என்பதாக கதையை ஆரம்பிக்கிறார். பாவம், தசரதன் இறந்து போகவும் ராமன்தான் காரணம் என்பதை நமக்கு விளங்க வைக்கிறார். இது நாள் வரை நாம் கைகேயியும் கூனிக் கிழவியும் செய்த சதியில் தசரதன், ராமனைக் காட்டுக்கு அனுப்பிய சோகத்தில் இறந்தார் என்றல்லவோ நினைத்திருந்தோம். இப்படி வித்தியாசமாக கதை தெரிதலும் ஒரு வகை புரிதலே.பல இடங்களில் இப்புத்தகம் நமக்கு நவீன காலத்து துப்பறியும் நாவல் ஒன்றை படிப்பது போன்ற எண்ணத்தைக் கொடுக்கிறது. கதையில் பல இடங்களில் இவர் கூறும் சம்பவங்கள் நமக்குக் கொஞ்சம் புதுமையாகவே இருக்கிறது. ராவணனின் தங்கையான சொர்ண நகை நமக்கு சூர்ப்பனகையாகவே தெரிந்திருந்தது. மாயமானாக சென்றது சொர்ண நகையின் வேலையாட்களில் ஒருவனாக சித்திரிக்கிறார். ஆனால் நாம் இது வரை ராவணனின் மாமாதான் மாய மானாக சென்றதாக படித்திருக்கிறோம். பல இடங்களில் நம்பத் தகுந்தாற்போல பல விஷயங்களைச் சொல்லியிருக்கிறார். ராவணனின் மகளாக இன்றும் நாம் நம்பும் சீதையை அவன் கடத்திச் சென்ற காரணமும் அசோக வனத்தில் வைத்து சீராட்டிய விதமும் அழகாக விவரிக்கப்பட்டுள்ளது.மொத்தத்தில் இனிமை… அழகான நீரோட்டமாக கதையைக் கொண்டுபோயிருக்கிறார்.