சித்தர் பாடல்கள் - மூலமும் உரையும்


Author: முனைவர் தமிழ்ப்பிரியன்

Pages: 0

Year: 2015

Price:
Sale priceRs. 990.00

Description

எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தாரப்பா/யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில்’ என, பாடிய பாரதிக்கு முன், ‘கலியுகத்தில் கணக்கு இருபத்தையாயிரம் தான் பாரே’ (தேரையர்) என்ற போதிலும், ‘திட்டமதாய்ப் பாணம் வைத்துத் தேவிபூசை சீர் பெற்றார் பதினெட்டுச் சித்தர் தாமே’ (பக். 535) என்று கருவூர்ச் சித்தரும், ‘சித்தர் பதினெண்மர் செய்கையில் தோன்றாத அத்தனருளும் புசுண்டன் யான்’ என காகபுசுண்டரும் பாடியதிலிருந்து, ‘பாரப்பா நவசித்தர் பதினெட்டாகி பாருலகில் பதினெட்டு சித்தரானார்’ (அகத்தியர் –   அமுதக் கலைஞானம்) என்பது புலனாகிறது.
எனினும், பதினெண் சித்தர்கள் யார் யார் என்பது இன்னும் தெளிவின்றியே உள்ளது. இந்த நூலில் மெய்ஞ்ஞான மாமுனி அகத்தியர், நிட்டையில் உயர் சட்டைமுனி, சித்தம் சிவமயமான சிவவாக்கியர், பாழும்மனம் அடங்கப்பாடிய பாம்பாட்டிச் சித்தர், ஞானக் கும்மி கொட்டிய கொங்கணர், ஆன்மிக ஞானி வால்மீகர், ‘நீர் மேல் குமிழியிக் காயமென்ற’ கடுவெளிச் சித்தர், பட்டினத்தார், பத்திரகிரியார் இப்படியாக, 18 பேர் பாடல்கள் உரையுடன் உள்ளன. சிவவாக்கியர் (256–494) பட்டினத்தார் (666–889) இருவரது பாடல்களும் பெரும்பகுதி உள்ளன.
‘சருகு அருந்தி நீர் குடித்துச் சாரல் வாழ் தவசி’களை விட, (பக்.486) இல்லறமே சிறந்தது என்னும் சிவவாக்கியர், ‘பொய்யான கல்வி கற்றுப் பொருள் மயக்கம் கொள்ளாமல்/மெய்ஞ்ஞானக் கல்வியை விரும்புவாய் கல்மனமே’ (இடைக்காட்டுச் சித்தர்), ‘எழும்பாமல்   வாசனையைக் கொன்றோன் ஞானி/ஏகாமல் வாசனையை யடித்தோன் சித்தன்’ (சட்டைமுனி) ‘பெண்ணாசை பாம்பு கடிக்காமல் அதன் விஷயம் பொசுங்க மவுனம் கடைபிடிப்பாய்’ (கருவூர்ச்சித்தர்) இப்படிப்பட்ட சித்தர்கள் வரிசையில், திருமந்திரப் பாடல்கள் (திருமூலர்)
விடுபட்டுப் போனது பெருங்குறையே.
மணி, மந்திரம், மருந்து எனும் யந்திர, மந்திர, தந்திரம் மூன்றையும் யோக, வாத, காய சித்தர்களாய் வாழ்ந்து கொண்டிருக்கும் சித்தர்களின் பாடல்களுக்கும், அவர்களது பரிபாஷைகளுக்கும் இன்னும் விளக்கம் அறியாமல் அரிச்சுவடி நிலையிலிருக்கும் நமக்கு, இதுபோன்ற நூல்கள் ஆன்ம வழிகாட்டிகளாய், ஞான விழிப்பூட்டும் என்பதில் ஐயமில்லை. படித்துப் பயன்பெற வேண்டிய, பாதுகாக்க   வேண்டிய பனுவல் இந்த நூல்.

You may also like

Recently viewed