Description
கடந்த இரண்டாயிரம் ஆண்டுகால உலக வரலாற்றில் கிறிஸ்தவ மதத்தின் தாக்கம் வலுவானது. உலக வரலாறே கிறிஸ்துவுக்கு முன் பின் என்றுதான் பகுக்கப்பட்டு விவரிக்கப்படுகிறது.தேவமைந்தன் ஏசுவின் பிறப்பை அடிப்படையாகக் கொண்ட கிறிஸ்தவ மதம் சென்ற இடமெல்லாம் ஏக போதித்ததுபோல அன்பை மட்டும் விதைக்கவில்லை. உலக வரலாற்றைப் படிக்கும் எவரும் மதப்பரப்பலுக்காக சிந்தப்பட்ட ரத்தத்தால் திகிலடைவர். இந்தப் பின்னணியில் கிறிஸ்தவத்தை பைபிள் ஆதாரங்களுடன் கடுமையான விமர்சனத்துக்குள்ளாக்கும் நூல்கள் பல ஏற்கெனவே மேற்கத்திய நாடுகளில் எழுதப்பட்டுள்ளன. ஆயினும், தமிழில் அதைப்போன்ற விரிவான நூல் வெளிவரவில்லை.கிறிஸ்தவத்தை விமர்சனத்துக்குள்ளாக்கும் வகையில் உமரி காசிவேலு எழுதியுள்ள இந்த நூல் வெளிவந்திருக்கிறது. நூலாசிரியரின் கடின உழைப்பு ஒவ்வொரு பக்கத்திலும் பளிச்சிடுகிறது. பரிசுத்த வேதாகமத்திலிருந்து மேற்கோள்கள் காட்டுவதில் தொடங்கி பலநூறு நூல்களிலிருந்து கருத்துகளை உள்வாங்கி இந்த நூலை எழுதியிருக்கிறார்.கிறிஸ்தவத்தின் உலகத் தோற்றக் கோட்பாடு, செமிட்டிக் மதங்களின் தாயகமான பாலஸ்தீனத்தின் வரலாறு, உலக நாடுகளில் கிறிஸ்தவம் பரவிய விதம், இந்தியாவில் கிறிஸ்தவத்தின் செல்வாக்கு பிரிவினைவாதத்தை வளர்க்கும் மத குருமார்கள், பைபிள்களின் உருவாக்கம் எனப் பல அம்சங்களில் கிறிஸ்தவத்தை விமர்சனத்துக்கு உள்ளாக்குகிறார் ஆசிரியர்.இந்நூல் ஆய்வு நூல் அல்லவெனினும் அதற்கான முழுத் தகுதிகளும் கொண்டதாக உள்ளது.