Description
காய்கறிகளுக்காக நம் முன்னோர்கள் பெரிய அளவில் செலவு செய்தது இல்லை. ஆனால், இன்று கணிசமான தொகையில் குறைந்த அளவு காய்கறிகளை வாங்கும் நிலைதான் உள்ளது. காரணம், காய்கறிகளின் விலை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே போவதுதான். இதில் வெங்காய விலைதான் அடிக்கடி நுகர்வோரை வெலவெலக்க வைக்கிறது. இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்கள், ‘வீட்டின் தோட்டத்தில் ஒரு எலுமிச்சை மரம், ஒரு கொய்யா மரம், ஒரு தக்காளிச் செடி, ஒரு கத்தரிச் செடி, ஒரு வாழை மரம் என வளர்த்தால் எந்த மனிதனும் ஒருநாளும் பட்டினியோடு படுக்கமாட்டான்’ என்று சொல்வார். நம்மாழ்வாரின் குரலை எதிரொலிக்கிறது இந்த நூல். ‘அடுக்குமாடி வீடுகளில் வசிப்பவர்கள் ஜன்னலோரங்கள், பால்கனி போன்ற இடங்களில் செடிகளை வளர்க்கலாம்; தனிவீடு உள்ளவர்கள், மொட்டை மாடிகளில் மண் தொட்டிகள், பிளாஸ்டிக் பைகள் மூலம் வளர்க்கலாம்; வாடகை வீடுகளில் உள்ளவர்கள், காம்பவுண்ட் சுவர்களில் கீரைகளை வளர்க்கலாம். வேலி போன்று படல் அமைத்து, அதில் கொடி வகை பயிர்களை சாகுபடி செய்யலாம். வீட்டைச் சுற்றி காலி இடம் இருப்பவர்கள், நேரடியாக மண்ணில் விவசாயம் செய்யலாம்’ - இப்படி இடத்திற்கு ஏற்ப என்னென்ன வளர்க்கலாம் என்பதை விளக்குகிறது இந்த நூல். வீட்டுத்தோட்டம் அமைப்பதன் மூலமாக, மாதந்தோறும் காய்கறிகளுக்குச் செலவிடும் தொகையை கணிசமான அளவுக்குக் குறைக்கலாம். வீட்டுத் தோட்ட செடி, கொடிகளைப் பராமரிப்பதால் உடல் உழைப்பு மட்டுமல்லாமல், மனதுக்கும் இதம் சேரும். இல்லங்கள்தோறும் தோட்டம் அமைத்து, உள்ளத்துக்கும் உடலுக்கும் உற்சாகம் ஊட்டுங்கள்!