Description
பள்ளியில் படித்தபோது, நன்றாகப் படிக்கும் மாணவி, நாட்டியத்தில் ஆர்வம், திரைப்படத்தில் கதாநாயகியாக தனி முத்திரை, புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம்... இப்படி அமைதியான வாழ்வை விரும்பியவர். ஆனாலும் காலம் அவரை அரசியலுக்குள் இழுத்து வந்து விட்டுவிட்டது. தான் விரும்பிய வாழ்க்கை இது இல்லை என்றாலும் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழக அரசியலில் ஆளுமையாகத் திகழ்ந்தார் அவர்தான் ஜெயலலிதா. தன் வழிகாட்டி எம்.ஜி.ஆர் மறைவுக்கு முன்னும் பின்னும் தனக்கு ஏற்பட்ட சோதனைகளைத் தாங்கி, தாண்டி தமிழக அரசியலிலும் ஏன் இந்திய அரசியலிலும் தவிர்க்க முடியாத இடத்தைத் தக்கவைத்துக்கொண்டார் ஜெயலலிதா. சிறு வயது முதலே தனிமை வாழ்க்கை வாழ்ந்ததால்தான் என்னவோ ‘நான் தவ வாழ்க்கை வாழ்கிறேன்’ என்று அவர் ஒருமுறை சொன்னார். அந்த சொற்றொடரில் பொதிந்திருக்கும் வேதனைகளை அவரே அறிவார். ஜெயலலிதாவை அவ்வளவு எளிதில் யாரும் சந்திக்க முடியாது என்ற பிம்பத்தை அவரே உருவாக்கினாரா அல்லது உருவாக்கப்பட்டதா என்பது வேறு. ஆனால் இந்த நூலைப் படிக்கும்போது அவர், இந்த ஆணாதிக்கச் சமுகத்தில் எத்தனை இடர்களைச் சந்தித்து உச்ச இடத்தைத் தொட்டார் என்பதை அறியமுடியும். விகடன் இணைய தளத்தில் தொடராக வெளிவந்தவை இப்போது நூலாகியிருக்கிறது. இது ஜெயலலிதா பற்றி முழுமையாக அறிந்துகொள்ள முக்கிய ஆவணமாகத் திகழும்!