Description
அரசியல் களம்; தன்னலமில்லா தலைவர்களையும் பார்த்திருக்கிறது, தன்னலம் மட்டும்கொண்ட தலைவர்களையும் பார்த்திருக்கிறது, மக்கள் தொண்டுக்காகவே வாழ்ந்த தலைவர்களையும் கண்டிருக்கிறது, அந்த மக்கள் ஆதரவை மடைமாற்றிக்கொண்டு லாபம் கண்ட தலைவர்களையும் கண்டிருக்கிறது. மக்களுக்காக மட்டுமே உழைத்த மாசற்றவர்களையும் சந்தித்திருக்கிறது, எப்படி எல்லாம் ஊழல் செய்யலாம் என்பதற்காக உழைத்த(!)வர்களையும் பார்த்திருக்கிறது. ஊழல் தேசியமயமாகிவிட்டது என்பதை இன்று நாம் கண்கூடாகக் காண்கிறோம்.
ஊழல் செய்யாத அரசியல்வாதிகளை விரல் விட்டு எண்ணிச் சொல்லிடலாம். அதிகாரத்துக்கு வருவதே ஊழல் பணத்தை அள்ளிக்கட்டத்தான் பேரவல நிலையில்தான் இன்றைய அரசியல் சூழல் உள்ளது. ‘தொண்டு செய்து பழுத்த பழம்’ என்று பாரதிதாசன் புகழ்ந்த பெரியார் அரசியல்வாதி அல்ல. அந்தப் பெரியாரின் அடித்தளத்தைக் கொண்டு தோன்றிய கட்சிகளைச் சேர்ந்தோர் சிலர், மக்கள் பணியை மறந்து, சொத்து சேர்ப்பதற்கு முதலில் வழியமைத்துக்கொடுத்தது யார் என்று தங்களுக்குள் தர்க்கம் செய்கின்றனர். தமிழக அரசியலிலும் இந்திய அரசியலிலும் சில அரசியல்வாதிகளின் சுயநலப்போக்கையும், தேர்தல் கூட்டணிக்காக அவர்கள் அடித்த அந்தர் பல்டிகளையும், அதிகாரத்தை வைத்துக்கொண்டு அவர்கள் செய்த ஊழல்களையும் பற்றிச் சாட்டை சொடுக்கும் கட்டுரைகள் இவை.
சமரசம் இல்லாமல் உள்ள நிலையை உள்ளபடி, அந்தந்த நேரத்து அரசியல் நிகழ்வுகள் பற்றி, ஆனந்த விகடனில், ப.திருமாவேலன் விமர்சனக் கட்டுரைகள் எழுதி வருகிறார். அவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். ஊழல்வாதிகளையும் சுயநல அரசியல் வியாபாரிகளையும், அவர்கள் மீது விமர்சன வெளிச்சம் பாய்ச்சி உலகுக்குக் காட்டிடும் இந்த நூல், அரசியல் களத்தைத் தூய்மையாக்கிடத் தூண்டுகோலாக இருக்கும்!