Description
ஒழுக்கம், சமத்துவம், பக்தி, ஞானம் ஆகிய அம்சங்களைத் தன் வாழ்நாள் முழுவதும் வலியுறுத்தியும் பரப்பியும் வந்த இந்த மகானின் நினைவைப் போற்றும் வகையில் ‘ஸ்ரீராமானுஜர் – ஆயிரம் காணும் அற்புதர்’ என்னும் இந்த மலர் படைக்கப்பட்டுள்ளது.ராமானுஜரின் வாழ்வு, தத்துவம், சிந்தனைகள், சமத்துவ எண்ணங்கள், அரும்பணிகள் முதலானவற்றை நினைவுகூரும் கட்டுரைகள் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. தத்துவம், வரலாறு, சமயம் ஆகியவற்றில் ஆழங்கால்பட்ட அறிஞர்களும் எழுத்தாளர்களும் ராமானுஜரின் வாழ்வின் சித்திரங்களைத் தீட்டியுள்ளார்கள். ராமானுஜரின் ஆளுமையின் பன்முக அம்சங்களை நமக்கு நினைவுபடுத்தும் நூலாக இந்த மலர் விளங்குகிறது. உடையவரின் வாழ்வையும் அவரது பணிகளையும் விரிவாகவும் சுவையாகவும் பதிவு செய்கிறது. உடையவர் மங்களாசாசனம் செய்த திவ்ய தேசங்களைப் பற்றிய தகவல்களையும் உள்ளடக்கியது.வேளுக்குடி ஸ்ரீஉ.வே. கிருஷ்ணன் சுவாமிகள், முனைவர் இரா.அரங்கராஜன், உ.வே. அனந்த பத்மநாபா சாரியார் உள்ளிட்ட ஆன்மிக அறிஞர்கள் பலர், வெவ்வெறு தலைப்புகளில் எழுதிய சிறப்புக் கட்டுரைகள் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. மேலும், கேள்வியப்பன் திருமலை பெத்த ஜீயரின் விரிவான நேர்காணலும், ஸ்ரீராமானுஜரின் ஏராளமான வண்ணப்படங்களும் மலரில் உள்ளன.பிறப்பினால் தீர்மானிக்கப்பட்ட சாதி வேற்றுமைகளை மறுத்து, பக்தியையும் ஞானத்தையும், நல்லொழுக்கத்தையும் ராமானுஜர் எவ்வாறு முன்னிறுத்தினார் என்பதையும், தத்துவ உலகிலும் இறைவனின் சன்னிதியிலும் பிறப்பு சார்ந்த வேற்றுமைகளுக்கு இடமில்லை என்று எவ்வாறு நிலைநாட்டினார் என்பதையும், பெண்களுக்கு ஆன்மிகப் பணிகளில் எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளித்தார் என்பதையும் விளக்கும் பல கட்டுரைகள் இந்த மலரில் இடம்பெற்றுள்ளன.