Description
திராவிட இயக்கம் என்பது பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் உருவான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சமூக மற்றும் அரசியல் இயக்கமாகும். சமூக நீதி, சுயமரியாதை, பெண் உரிமை, சாதி மறுப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, இட ஒதுக்கீடு ஆகிய கருத்துகளை வலியுறுத்தி சமூக மாற்றத்தை முன்னெடுத்த முன்னோடி இயக்கம்.
திராவிட இயக்க வரலாற்றையும் சாதனைகளையும் கூறுவதற்கு முன்பு திராவிடம் என்ற சொல்லைப் பற்றி தெளிவாக விளாக்கியுள்ளார் நூலாசிரியர். "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' எழுதிய இராபர்ட் கால்டுவெல்தான்
முதன்முதலில் "திராவிட' என்ற சொல்லைப் பயன்படுத்தியவர் என்று பரவலாக நம்பப்பட்டாலும், அதற்கு முன்பே மனுதர்ம சாஸ்திரத்தில் "பவுண்டரம், ஒளண்டரம், திராவிடம், காம்போசம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளதையும் (சுலோகம் 44), அபிதானி சிந்தாமணி நூலில் குறிப்பிடப்பட்டுள்ள 56 தேசங்களில் ஒன்றாக "திராவிடம்' இடம் பெற்றுள்ளதையும், ஸ்மிருதியிலும்
"பஞ்ச திராவிடம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளதையும் எடுத்துக்காட்டுகிறார்.
தொடக்கத்தில் "திராவிட' என்ற சொல்லைக் கொண்டு பல அமைப்புகள் உருவாகியிருந்தாலும், உரிமை மீட்பு என்கிற நோக்கத்துடன் ஓர் இயக்கம் உருவானது 1912 இல்தான். அது மருத்துவர் சி.நடேசன் உருவாக்கிய "தி மெட்ராஸ் யுனைடெட் லீக்' என்ற அமைப்பு. அது பின்னர் "பிராமணரல்லாதார் இயக்கம் ' என அழைக்கப்பட்டு, அல்லாதவர் என்பது எதிர்மறைச் சொல்லாக உள்ளதால் "திராவிடச் சங்கம்' என பெயர் சூட்டப்பட்டது.
திராவிட இயக்கம் சமூக மாற்றத்தை முன்னெடுப்பதற்கு துணை நின்றவை திராவிட இயக்க நாடகங்களும் திராவிட இயக்க இதழ்களும். அவற்றைப் பற்றியும் இந்நூலில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. மேலும் முப்பதுக்கும் மேற்பட்ட திராவிட இயக்க இதழ்கள்,
தனித்தமிழ் இயக்க இதழ்களின் முகப்புப் படங்கள் இணைக்கப்பட்டிருப்பது சிறப்பு.
நூற்றாண்டு கடந்துவிட்ட திராவிட இயக்கச் செயல்பாடுகளையும், தனித்தமிழ் இயக்கச் செயல்பாடுகளையும் அறிய உதவும் அரிய கையேடு இந்நூல்.