Description
ஒரு நூலகத்தில் காந்தியின் தொகுக்கப்பட்ட நூல்களை பார்ப்பவர் எவரும் துணுக்குறுவார்கள். இந்தியாவில் எந்த ஒரு எழுத்தாளரும் கற்பனைசெய்யக்கூட முடியாத அளவுக்கு எழுதிக்குவித்திருக்கிறார் காந்தி. அரசியல்கட்டுரைகள், அறிக்கைகள்,கடிதங்கள் என. அவற்றில் அரசியல் மட்டுமல்ல மருத்துவம் முதல் பொருளியல் வரை அனேகமாக நவீன வாழ்க்கையின் எல்லா தளங்களையும் தொட்டுச் சென்றிருக்கிறார். இருபதாம் நூற்றாண்டின் மகத்தான உள்ளங்களில் ஒன்று காந்தி. காந்தி இடைவிடாது உரையாடிக்கொண்டே இருந்தார். பல்வேறு தளங்களில் பலதரப்பட்டவர்களுடன். அந்த உரையாடல் வழியாக அவர் கற்பித்தார், கற்றுக்கொள்ளவும் செய்தார். இந்த இரண்டாவது அம்சம்தான் விந்தையானது. மார்க்சியம் பற்றி பியாரிலாலுக்கும் காந்திக்கும் இடையிலான உரையாடலை வாசித்தபோது எண்ணிக்கொண்டேன், காந்தி இவ்வகையில்தான் கற்றுக்கொள்ள முடியும் என. அவர் வாசகர் அல்ல, ஆனால் பேரறிஞர். காந்தியின் காதுகள் மிகப்பெரியவை, அவை கேட்கும் வல்லமை மிக்க யானையின் காதுகள். ஜே.சி.குமரப்பா முதல் வெரியர் எல்வின் வரை அவருடைய அத்தனை மாணவர்களும் அவருக்குக் கற்பித்தவர்களும்கூட. காந்தியைப்பற்றி அறிவதற்கும் உகந்த முறை உரையாடுவதுதான். காந்தியை தன் கைகளால் விவசாயம் செய்யும் ஒருவர் புரிந்துகொள்ள முடியும். ஓர் அரசியல்நிலைபாட்டாளர் புரிந்துகொள்ள முடியாது வெவ்வேறு தளங்களில் காந்திபற்றிய உரையாடல்களை நான் நிகழ்த்தினேன். உரைகள், கேள்விபதில்கள், குறிப்புகள் என. அவற்றின் தொகுதி இது காந்திக்குச் செல்லும் பாதையை இந்நூல் தெளிவுபடுத்தும் என நம்புகிறேன்.- ஜெயமோகன்