Description
ஒடுக்கப்பட்ட ஒரு சமுதாயம் அரசியல் பண்பாட்டால் எவ்வாறு முன்னேற்றமடைந்திருக்கிறது என்பதைக் கொள்ள உதவும் புத்தகம். தென்னிந்தியாவில் உள்ள பல்வேறு சமுதாயங்களில், கடந்த இருநூறு ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றத்தின் தாக்கத்தைத் தெளிவாகச் சான்றுரைப்பவர்கள் நாடார்கள்தான் எனலாம். பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உயர்சாதி இந்துக்களால் மிகக் கீழான வகுப்பினராக - கள்ளிறக்குபவர்களாகவும் பனையேறிகளாகவும் கருதப்பட்ட நாடார்கள், மிகக் கடுமையான சமூக இயலாமைகளால் துன்பம் அனுபவித்தவர்கள். தமிழ்நாட்டில் மிக மோசமான ஒடுக்குதல்களுக்கு உட்பட்டிருந்த சமுதாயங்களில் தாங்களும் ஒன்றாக இருந்தார்கள். கடந்த ஒன்றரை நூற்றாண்டாக நிகழ்ந்த சமூக, பொருளாதார மாற்றத்திற்கு நுண்ணுணர்வுடன் எதிர்வினை ஆற்றுபவர்களாக இருந்ததால், நாடார்கள் இன்று பொருளாதாரத்துறை அரசியல்துறை இரண்டிலும் தெற்கில் மிக வெற்றிபெற்ற குழுவினராகவும், தங்கள் முயற்சியாலும் சாதனையாலும் மரியாதையைப் பெறுகின்றவர்களாகவும் உள்ளனர். அவர்களது இனத்திலிருந்து வணிக முன்னோடிகள், தொழிலதிபர்கள், வாழ்க்கைத்தொழில் செய்வோர் பலர் தோன்றியுள்ளனர். அரசியலில், அவர்களின் திறன்மிக்க வழித்தோன்றலான காமராஜர், தமிழக முதலமைச்சராகவும் அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இருந்து தமது இனத்திற்குப் புகழளித்துள்ளார். நாடார்களுக்கு ஒரு கொந்தளிப்பு மிக்க, வண்ணமயமான வரலாறு இருக்கிறது. அந்தச் சாதிக்கும் அதன் எதிர்ப்பாளர்களுக்கும் இடையில் தொடர்ச்சியாக அதிகரித்து வந்த மோதல்களின் ஊடாக, ஒடுக்கப்பட்ட நிலைமையிலிருந்து தாங்கள் உயர்வதற்காகச் செய்த போராட்டம் கதைப் பாங்கான வடிவங்களை ஏற்றது. தோள்சீலைப் போராட்டம் முதலாக, சிவகாசிக் கொள்ளை ஊடாக, நாடார் மகாஜன சங்கம் வரை, இந்தியச் சமூகத்தின் அணி-திரட்டல் செயல்முறையை எடுத்துக்காட்டும் நாடார்களின் எழுச்சி, மாற்றம் பெறும் ஒரு சமுதாயத்தின் அரசியல் வாழ்க்கையைப் பகுப்பாய்வு செய்ய வளமான பொருண்மையை அளிக்கிறது.