Description
கண்டுகொள்ளப்படாதிருந்தவர் என்ற அயோத்திதாசர் மீதான இதுவரையிலான பார்வையை இத்தொகுப்பு கேள்விக்குட்படுத்துகிறது. பாரதி, உவேசா, இரட்டைமலை சீனிவாசன், ம. சிங்காரவேலர், ம. மாசிலாமணி, ஜி. அப்பாதுரை, மயிலை சீனி. வேங்கடசாமி ஆகிய அவரின் சமகால ஆளுமைகளோடும் அவர்தம் சிந்தனைகளோடும் அயோத்திதாசர் ஊடாடியத் தருணங்களைக் கண்டறிவதன்மூலம் மேற்படி பார்வையை எதிர்கொண்டிருக்கிறது. பெயரைச் சுட்டாமல் மறைபொருளாக இழையோடிக்கிடக்கும் இவர்களுக்கிடையேயான உறவும் முரணும் ஒப்பீடு, குறியீடுகளைப் பொருள்கொள்ளுதல், மௌனங்களை வாசித்தல் போன்ற முறையியல்கள் வழியாக அபாரமாக வெளிப்பட்டிருக்கின்றன. இதன்மூலம் இயக்கம் என்பதன் அர்த்தத்தை மறுவரையறை செய்து அயோத்திதாசர் ஓர் இயக்கம் என்று வாதிடுகிறார் ஸ்டாலின் ராஜாங்கம். நவீன தமிழ்ச் சமூகத்தின் அறிவியக்க வரலாறாகவும் பரிணமித்திருக்கும் இந்நூல் அயோத்திதாசரை அவர்கால வரலாற்றில் வைத்துப் புரிந்துகொள்ள வழிகாட்டுகிறது. தரவுகளைவிட அவற்றை வாசிக்கும் முறையியல் சார்ந்தே அர்த்தங்கள் உருவாகின்றன என்று கூறும் இந்நூல், நமது முறையியல் பற்றிய விவாதத்தை நிகழ்த்தியபடியே முன் நகர்ந்திருக்கிறது.