Description
கழுகுமலை அடிவாரப் பாறைகளில் காணப்படும் கிறுக்கிய பல ரூபங்கள், பாதையில் போவோர் வருவோரைக் கூப்பிடும் உருவிலிகள், நரிக்குட்டி கண்ணுக்குப் படும் ஒளியுருவங்களை சோ. தர்மனின் கதைகளில் காணலாம்.
சொல்கதையில் உள்ள கனவுப் புனைவும் எதார்த்தமும் சேர்ந்தவை சோ. தர்மனுடையது. ஊரின் மண்ணாலான குரல்வளையைக் கோதி, அவர் தம் கதைகளைக் காத்து நிற்கிறார். நடுமதியத்தின் உலர்ந்த நில வெளியில் இயற்கையில் படிந்திருக்கும் ஆவியரோடு மரக்கிளைகளில் மறைந்திருக்கும் சிற்றூர்களை எழுதிய கலைஞனாக நான் அவரைப் பார்க்கிறேன்.
இந்தத் திரட்டில் உள்ள கதைகள் அலாதியான தெருவின் வாசனையில் மண்கூரை இற்று உதிரும் இயற்கையின் துகள்களாக உரையாடுகின்றன.
கருப்பு மண்ணில், இருநூறு ஆண்டுகளுக்கு முன்னால் ஓடையைக் கடக்க முயன்று இறந்துபோன வள்ளியின் பெயராலான ஓடை ஒவ்வொரு ஊரிலும் உண்டு. அதைக் கடக்கும்போது சத்தமில்லாமல் ஜனங்கள் செல்வார்கள். அதுபோல இறந்துபோய், மறைந்தும் மறையாமல் உருவிலிகளாக இருப்பவர்களை அவருடைய கதைகளில் காண்கிறேன். அவர்கள் கண்விழித்துக் காட்டின் கடைக்கோடி வாசனையில் கதாபாத்திரங்களாகத் தோன்றிவருகிறார்கள். எந்தக் காற்றில் யார் வருகிறார்கள் என்ற வியப்பில் வாசகர்களை வைத்து, கதையில் மாயத்தைத் தொடர்ந்து பூசிவருகிறார் சோ. தர்மன். வள்ளி ஓடையை சோ. தர்மன் கடக்கவே இல்லை.
எங்கள் நிலப்பரப்பில் உப்பாங்காத்து, குருமலைக்காத்து, கட்டும் ஆடையை உருவிவிடும் கயத்தாரிலிருந்து வரும் மேகாத்து என்று பல காற்றுகள் உண்டு. பெரும்பாலும் உப்பாங்காத்தில் மாட்டிக்கொண்டவர்கள்தான் சோ. தர்மனின் கதாபாத்திரங்கள்.
சொல்லுதல் எல்லாம் ஆழ்மனப் படிமத்தைத் தொட்டு மறைவு மையால் எழுதியவை. கானல்நீரலையில் உருவழியும் வெப்பநிலக் கோடுகளில் சினைப்பட்ட நரியின் முனகல்கள் தர்மனின் கதைகளில் அரிச்சல்களாகக் கேட்பதை வாசிப்பில் நீங்களும் உணரலாம்.
- கோணங்கி