Description
பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற நூலாசிரியர், தனது 16 சிறுகதைகளைத் தொகுத்து நூலாக வெளியிட்டுள்ளார். இந்தச் சிறுகதைகள் தினமணி கதிர் உள்ளிட்ட இதழ்களில் வெளியானவை.
தனது வாழ்வில் நேரிட்ட அனுபவங்களைப் பெரும்பாலும் கதை வடிவமாக்கி இருப்பதாக முன்னுரையில் நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு கதையையும் படிக்கப் படிக்க கிராமத்து பேச்சு நடையில் விறுவிறுப்பாகச் செல்கிறது. கதையின் தொடக்கத்தில் இருந்து, முடிவு வரை ஒவ்வொரு கதையும் சலிப்புத் தட்டாமல் செல்கிறது.
வாழ்க்கை அனுபவம் என்றால் சுய புராணம் பாடாமல், ஒவ்வொரு கதையிலும் நமக்குத் தெரியாத விஷயங்களையும் புரியவைத்துள்ளநூலாசிரியரின் சொற்சித்திரம் பாராட்டத்தக்கது.
மீண்டும் ஒரு தொடக்கம் என்ற சிறுகதையில், 30 ஆண்டுகளுக்குப் பின்னர், தனது சொந்த ஊரான பாளையத்துக்குச் செல்லும் ஏழுமலை என்கிற கதாபாத்திரத்தின் அனுபவத்தை நூலாசிரியர் விவரிக்கிறார். பழைய பாளையத்துக்கும் நவீன பாளையத்துக்குமான விவரணைகள் சிறப்பு. மேலும், அங்கு திண்ணை வீடுகள் மாறி மாடி வீடுகளாக உருவெடுத்துள்ளதும், தெருக்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், பள்ளியில் வேப்பமரத்தடியில் சத்துணவைத் தயார் செய்வது, கிராமத்தில் நடக்கும் பல்வேறு முறைகேடுகளால் மனம் வருந்துவது ஆகியன நம் ஒவ்வொருவருக்கும் ஏற்படுகிற ஒன்றுதான்.
வழக்கமாக, நூலாசிரியர்கள் தங்களது நூலுக்கு முன்னுரையை எழுதும்போது பிரபலங்களை முன்னிறுத்தி நன்றி கூறி மகிழ்வார்கள். ஆனால், இவரோ தனது முயற்சிகளுக்குத் துணை நிற்கும் தன் மனைவி அலர்மேல் மங்கைக்கு நன்றி கூறியுள்ளார். அசலான வாழ்க்கையை அறிய விரும்புவோர் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது!