Description
வடக்குத்தெருவில் தலித்துக்கள். தெற்குத் தெருவில் ஆதிக்க சாதிக்காரர்கள். கிழக்கிலிருந்த பண்ணையார் தோட்டக் காடுகளில் பாடுபட்டுத்தான் தலித்துக்களின் பிழைப்பு.
தெற்குத்தெருக்காரர்களுக்குச் சாராயம் காய்ச்சும் தொழில். தலித்துக்கள் அங்கே வருகைத் தருவது வாடிக்கை. தெற்குத்தெருக்காரர்களுக்குப் போதை ஏறும் தருணங்களில் வடக்குத் தெருவுக்கு வந்து தலித் பெண்களை வல்லடியாய் வேட்டையாடுவது வழக்கமாயிருந்தது. தட்டிக்கேட்பதற்குத் தலித்துக்கள் பலமில்லாதிருந்தார்கள்… பொருளாதாரத்தில் மட்டும் அல்ல, ஆள் எண்ணிக்கையிலும்.
அப்படி ஒருநாள் வேட்டையாடப்பட்டவள்தான் ‘தெய்வானை’ என்கிற தலித் பெண். இரவு எட்டுமணிக்கு அவளுக்குத் திருமணம். ஏழுமணிக்கே தெற்குத்தெரு சண்டியர்கள் மூன்றுபேர்கள் திரண்டு வந்து தெய்வானையைத் தூக்கிக்கொண்டுபோய் தெரு அம்மன் கோயிலுக்கு முன்னால் விரிந்து கிடந்திருந்த பாறை மறைவில் கிடத்திப் பாலியல் வன்கொடுமைச் செய்துவிட்டு அவளைக் கொன்றும்விடுகிறார்கள். அவளின் பெற்றோர் மற்றும் தெருக்காரர்களின் முன்னாலே இந்தக் கொடூரம் அரங்கேறுகிறது.