வீர வாஞ்சி


Author: ரகமி

Pages: 200

Year: 2021

Price:
Sale priceRs. 100.00

Description

1980களில் தினமணி கதிர் இதழில் வீரவாஞ்சி என்ற தொடர் “ரகமி” (ரங்கஸ்வாமி ஐயங்கார்) எழுதி வந்துகொண்டிருந்தபோது நான் பள்ளி மாணவன். அந்தத் தொடரை மிகுந்த ஆர்வத்துடன் வாசித்ததும் அதில் வந்த படங்களும் கூட நினைவில் இருக்கின்றன. 1982 பாரதியார் நூற்றாண்டு விழாவை ஒட்டி பல மேடைகளில் பேச்சுப்போட்டி பரிசுகள் பெற்றுவந்ததால் இயல்பாகவே சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்து எது கிடைத்தாலும் படித்துவிடுவதும் வழக்கமாக இருந்தது. பின்பு ரகமி எழுதிய வேறு சில புத்தகங்களையும் வாசித்திருக்கிறேன். ஆனாலும் நினைவில் தங்கியிருப்பது வீரவாஞ்சி மட்டும் தான்.

தமிழ்நாட்டின் நினைவிலேயே ஏறக்குறைய விலகிவிட்டிருந்த “திருநெல்வேலிப் புரட்சி”யையும் அதன் முக்கியப்புள்ளியான வாஞ்சிந்தாதனின் வீர வரலாற்றையும் குறித்து பல்லாண்டு கால உழைப்பைச் செலுத்தி, ஆதாரங்களைத் திரட்டி அதன் அடிப்படையில் மிகச்சொற்பமான புனைவுத்தன்மை சேர்த்து ரகமி எழுதிய நூல் இது. அச்சில் இல்லாதிருந்த இந்த நூலை, இந்த சுதந்திரப் பவள விழா ஆண்டில் பாரதி நூலகம், மறுபதிப்பு செய்துள்ளது. அதே பழைய எழுத்துருவில், படங்களுடன் சேர்த்து வெளியிருப்பது மிகச் சிறப்பு. இதன் பின்னுள்ள Narasimhan U Vijayraghava Sharma ஆகிய நண்பர்களுக்குப் பாராட்டுக்கள்.

நெல்லைச் சீமையில் கிளர்ந்த சுதேசி இயக்கம், ரகசிய கூட்டங்களில் காளி சிலை முன்பு கைவிரல் இரத்தத்தைச் சிந்தி சபதம் செய்யும் பாரதமாதா சங்கத்து உறுப்பினர்கள், சிதம்பரம்பிள்ளைக்கும் சிவாவுக்கும் கடும் தண்டனை அளித்த பிரிட்டிஷ் ஆட்சி மீது கனலும் கோபம், புதுச்சேரியில் பாரதியார், வ.வேசு ஐயர் முதலானவர்களுடனான தொடர்புகள், ஆஷ் கொலைக்குப் பின் போலிசாரின் அடக்குமுறைகள், அம்பலமாகும் புரட்சிக்குழுவினரின் நடவடிக்கைகள் நம்பிக்கைத் துரோகங்கள் என்று பலவற்றையும் தொட்டுச் செல்லும் வரலாற்று ஆவணம் இந்தச் சிறிய நூல். எருக்கூர் நீலகண்டன் என்கிற நீலகண்ட பிரமசாரி, ஆலப்புழை ஹரிஹரய்யர், கிருஷ்ணாபுரம் சங்கர கிருஷ்ணன், ஒட்டப்பிடாரம் மாடசாமி பிள்ளை, தென்காசி மடத்துக்கடை சிதம்பரம்பிள்ளை, ஜக்கு என்கிற ஜகன்னாதையங்கார், ‘வந்தே மாதரம்’ சுப்பிரமணிய ஐயர் என ரத்தமும் சதையுமான எளிய மக்கள் – விவசாயிகள், சமையல்காரர்கள், வியாபாரிகள், பள்ளி ஆசிரியர், வக்கீல் குமாஸ்தா என பலதரப்பட்ட மக்கள் ஈடுபட்ட இயக்கம் இது. அத்தனை பேரும் 30 வயதுக்குக் குறைவானவர்கள். ஆஷ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 14 பேரில், 9 பிராமணர்கள், 5 பேர் சைவவேளாளப் பிள்ளைமார்கள் (ஒருவர் கூட “போர்க்குடி” எனப்படும் சாதியினர் அல்ல) என்ற விவரணம் நம் தீவிரமான சிந்தனைக்குரியது.

இந்த நூலில் எழுந்து வரும் வாஞ்சியின் ஆளுமை அபாரமானது. 25 வயது வாஞ்சி சுதேசியப் புரட்சி முயற்சிகளில் தீவிரமாக இருக்கிறார். அவருக்கு ஒரு பெண்குழந்தை பிறந்து, இறந்துவிடுகிறது. அப்போது வாஞ்சியின் தந்தை ரகுபதி ஐயர் இந்தத் தகவலைத் தெரிவிக்கிறார்.

“இப்போது என்னால் எங்குமே வரமுடியாது” என்றார் வாஞ்சி மிக்க வெறுப்புடன்.

“அப்படிச் சொல்லாதேடா வாஞ்சி. உனக்குக் குழந்தை பிறந்து செத்துப் போனதற்கு குழந்தைக்கு அப்பா நீதான் புண்ணியாகவசனம் பண்ணவேண்டும்..”

“அப்படியா, நானும் செத்துப் போயிட்டேன்னு நினைச்சு, எனக்கும் சேர்த்து அதையும் நீங்களே பண்ணிவிடுங்கள்”

“எதுக்குடா இப்படியெல்லாம் அபசகுனமா சொல்லறே. நீ இப்படி எல்லாம் சொன்னால் என் மனசு தாளாதுடா. ஊருக்கு வா, தீக்ஷையை க்ஷவரம் பண்ணிக்க வேணும்”

“அப்பா, நான் இதைக் கர்ப்பதீக்ஷையாக வளர்க்கவில்லை. இந்த வெள்ளைக்காரன்களை நம் பாரதநாட்டை விட்டே துரத்தி, பாரததேசம் சுதந்திரம் அடைய வளர்த்த சுப தீக்ஷை. அதற்கான காரியம் நிறைவேறும் வரையில் நான் இதனை எடுக்கப் போவதில்லை. இது சத்தியம்” என்று மிக்க ஆவேசத்துடன் கத்தினார் வாஞ்சி.

இந்த வரிகளை வாசிக்கும் போது உள்ளம் பதைபதைக்கிறது. பெரும் துக்கம் நெஞ்சைக் கவிகிறது. “தண்ணீர் விட்டோ வளர்த்தோம் இப்பயிரைக் கண்ணீரால் காத்தோம்” என்ற பாடல் வெறும் உணர்ச்சிகரம் அல்ல, அதிலுள்ள சத்தியத்தின் தகிப்பு நம்மைச் சுடுகிறது.

தமிழ்நாட்டின் ஒவ்வொரு தேசபக்தரும் வாசிக்க வேண்டிய நூல்:

You may also like

Recently viewed