அரசியலாகிற பண்பாடு


Author: கிறிஸ்டோபர் காட்வெல்

Pages: 0

Year: NA

Price:
Sale priceRs. 460.00

Description

1935 ல் கிறிஸ்டோபர் காட்வெல் "மாயையும் உண்மையும்" (Illusion and Reality) என்ற தனது முதல் நூலை எழுதி மாக்மில்லன் பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டார்.உடனடியாக அடுத்து வந்த ஆண்டுகளில் "அழிந்துவரும் பண்பாடு பற்றிய ஆய்வுகள்"(Studies on a Decaying Culture), "இயற்பியலில் நெருக்கடி"(Crisis in Physics) போன்ற நூல்களையும் எழுதினார்.

அவர் எழுதிக் குவித்தவற்றை உடனடியாக வெளியிட இயலவில்லை.இதற்கிடையில் ஸ்பானிய நாட்டில் பாசிச நெருக்கடி உருவாயிற்று.பல ஐரோப்பிய நாடுகளிலிருந்து பாசிச எதிர்ப்புப் போராளிகள் ஸ்பானிய நாட்டுக்கு விரைந்தனர்.காட்வெல்லும் பிரிட்டிஷ் கட்சியின் பிரதிநிதியாக ஆயுதமேந்தி ஸ்பெயினுக்குச் சென்றார்.போர்க்களத்தில் அவர் அதிக காலம் போராட முடியவில்லை

1937 ல் அப்போது அவருக்கு 29 வயது,அவர் போர்க்களத்தில் கொல்லப்பட்டார். இறந்த அவரது உடலைக்கூட தோழர்களால் மீட்டெடுக்க முடியவில்லை.

அவரது எழுத்துகள் மார்க்சிய சிந்தனையில் கற்றுத் தேறியவையாக உள்ளன என்பதைக் கண்டறிந்த கம்யூனிஸ்ட் சிந்தனையாளர்கள்,அவரது இழப்பு எவ்வளவு பெரியது என்பதை அப்போதுதான் உணர்ந்தனர். அவரது நூல்களை ஒழுங்கமைத்து வெளியிடும் முயற்சியில் பிரிட்டிஷ் மார்க்சியர்கள் ஈடுபட்டனர். இன்றுவரை சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட அவரது நூல்கள் பல்வேறு பதிப்புகளில் வெளிவந்துள்ளன.

காட்வெல் பற்றிய ஆய்வுகள் விவாதங்கள் ஆங்கில மார்க்சியத்தின் முக்கியமான ஒரு பகுதியாக விளங்குகின்றன.மௌரிஸ் கார்ன்போர்த், ஈ.பி.தாம்சன், ரய்மோன்ட் வில்லியம்ஸ் போன்ற மூத்த மார்க்சிய அறிஞர்கள் காட்வெல்லின் எழுத்துகள் பற்றிய காத்திரமான விவாதங்களில் பங்கேற்றுள்ளனர்.

வழக்கமான மார்க்சிய எழுத்துகளிலிருந்து வேறுபட்ட வித்தியாசமான வடிவமும் நடையும் கொண்டவையாக அவரது நூல்கள் அமைந்துள்ளன.
அவருக்கே உரியது என தனித்த அணுகுமுறையை அவர் கட்டமைத்துள்ளார்.

இலக்கியத்திலிருந்தும் அறிவியலிலிருந்தும் மிக விரைவாக அவரால் தத்துவப் பிரச்சினைகளுக்குள் நுழைய முடிகிறது.கிறிஸ்டோபர் காட்வெல் தான் ஆங்கில மார்க்சியத்தின் முதல் சிந்தனையாளர் என்று ஒரு விமர்சகர் எழுதுகிறார்.

உணர்ச்சிவயப்பட்ட நிலையில் மனிதரும் இயற்கையும் சந்தித்து கவிதை தோன்றுகிறது.அறிவுப்பூர்வமான நிலையில் மனிதர் இயற்கையைச் சந்தித்து
விஞ்ஞானங்களை உண்டாக்கிக் கொள்ளுகின்றனர்.மனிதரும் இயற்கையும் சந்தித்துக் கொள்ளும் பரப்பு செயல்தன்மை கொண்டது. அது உழைப்பின் பிறப்பிடம்,உற்பத்தியின் நிகழ்விடம்,உற்பத்தி முறைகள் தொழில்படும் இடம். உற்பத்தி சக்திகளும் உற்பத்தி உறவுகளும் முரணிக் கொண்டு மாற்றங்களைப் பிறப்பிக்கும் களமாகவும் அது அமைகிறது.

அது இடைவிடாமல் மாற்று சாத்தியப் பாடுகளைத் தேடிக்கொண்டே இருக்கிறது. அதுவே தொன்மங்கள்,கலை இலக்கியம்,பண்பாடு,
விஞ்ஞானங்கள்,ஊற்றெடுக்கும் தோற்றுவாயாகவும் அமைகிறது.எனவே அதுவே சமூகம் தோன்றுமிடம் ,அதுவே சமூக உணர்வு தோன்றுமிடம். சமூக வாழ்வில் கலைஞனின் கூட்டுணர்வும் தனி மனித உணர்வும் கூட இங்கு தான் தோன்றுகின்றன.

அவன் சுதந்திரம் ஈட்டுவதும் இதே செயல்பாட்டின் ஊடாகத்தான்.மனிதர் சமூகப் பொருளாதார,பண்பாட்டு உள்ளடக்கத்தை இங்குதான் ஈட்டிக் கொள்கின்றனர்.மனிதருக்கும் இயற்கைக்கும் இடையிலான முரண்பாடுகளை நோக்கி மார்க்சியத் தத்துவம்,வரலாற்றுப் பொருள்முதல் வாதம் ஆகியவற்றின் அத்தனை ஆற்றல்களையும் கிறிஸ்டோபர் காட்வெல் ஈடுபடுத்துகிறார்.

காட்வெல் தனது நூல்களின் உள்ளடக்கமாக அமைத்துள்ள உப தலைப்புகளில் சிலவற்றை உற்று நோக்குவோம்.

தொன்மவியலின் மரணம்*

கவிதையின் பிறப்பு,நவீன கவிதையின் வளர்ச்சி,

ஆங்கிலக் கவிஞர்கள் 1
ஆரம்ப மூலதனத் திரட்சிக் காலம்

ஆங்கிலக் கவிஞர்கள் 2
தொழில் புரட்சிக்காலம்

ஆங்கிலக் கவிஞர்கள் 3
முதலாளிய வீழ்ச்சிக் காலம்.

தொன்மங்கள் தொடக்கி சமகால முதலாளியம் வரை அவர் நெடுகப் பயணித்துள்ளதைக் காணமுடிகிறது.ஒவ்வொரு காலக் கட்டத்தின் முனைப்பான எழுத்தாளர்களைப் பற்றிய மதிப்பீடுகளை வழங்குகிறார்.

அரசியலாகிற பண்பாடு என்ற இந்நூல் கிறிஸ்டோபர் காட்வெல்லின் நாலைந்து நூல்களிலிருந்து தேர்வு செய்யப்பட்ட கட்டுரைகளைக் கொண்ட நூலாக புதிய பதிப்பினைக் கண்டுள்ளது.

You may also like

Recently viewed