Description
நூலாசிரியர் தனது பத்திரிகை உலக அனுபவங்களை மூன்றாம் நபர் சொல்வது போல் எழுதியிருக்கிறார்.
"ஹிந்து' ஆங்கில நாளிதழின் தென்னாற்காடு நிருபராகவும், பின்னர் உதவி ஆசிரியராகவும் நூலாசிரியர் பணியாற்றியுள்ளார்.
புதிதாக நிருபர் பணி ஏற்பவர்களை செய்தி சேகரிக்க அப்போதெல்லாம் பொது மருத்துவமனைக்குத்தான் அனுப்புவார்கள்.
நூலாசிரியர் நிருபர் பணியும் சென்னை பொது மருத்துவமனையின் பிணவறையில்தான் தொடங்கியிருக்கிறது. இறந்தவரைப் பற்றிய தகவலைத் திரட்டியது முதல் செய்தியானது.
சாரணர் இயக்கத்தின் இலட்சிய வாசகம் "தயாராக இரு'. நிருபர்களுக்கும் அது ஓர் உந்துதல் வாசகம். நெல்லூர் அருகே எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்ட செய்தியைச் சேகரிக்கச் சென்றபோது ஏற்பட்ட சிரமம் அந்த செய்தி நாளிதழில் புகைப்படத்துடன் வெளியானபோது ஏற்பட்ட மகிழ்ச்சி, பெருமையை சிறப்பாகப் பதிவு செய்துள்ளார்.
தென்னாற்காடு நிருபராக இருந்தபோது, மாவட்ட வளர்ச்சிப் பணிகள் பற்றி எழுதியதோடு மாவட்ட பிரச்னைகள் குறித்தும் நடுநிலையுடன் எழுதினார். மாவட்ட நிர்வாகம் நிருபரைப் பற்றி பத்திரிகை ஆசிரியருக்குப் புகார் தெரிவித்தது. புகாரை புறக்கணித்து நிருபரை ஆதரித்தார் "ஹிந்து' நாளிதழின்
அப்போதைய ஆசிரியர் என்.ரவி. நிருபர்கள் சரியான தகவல்களைக் கொடுத்து எழுதினால் அந்த விவரங்களை யாராலும் மறுக்க முடியாது. பத்திரிகை நிர்வாகமே அவர்களுக்கு துணை நிற்கும் என்பதை இச்சம்பவம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இளைய தலைமுறை நிருபர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய முக்கியமான அம்சம், தொழிலிலும் வாழ்விலும் நேர்மை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இளம் பத்திரிகையாளர்களுக்கு இந்நூல் ஒரு சிறப்பான வழிகாட்டி.