Description
விரல் நுனியில் சினிமா' என்று சொல்வதற்கு ஓர் எடுத்துக்காட்டு கவிஞர் பொன்.செல்லமுத்து. தமிழ் சினிமா குறித்தும், திரைப்படங்கள் குறித்தும், திரையிசைக் கவிஞர்கள் குறித்தும் அவர் செய்திருக்கும் ஆய்வுகள் குறித்துக் கேட்டால் நமக்கே தலைசுற்றும். அந்த அளவுக்கு எல்லாமே அவருக்கு அத்துப்படி.
தமிழ் சினிமா குறித்து கவிஞர் பொன். செல்லமுத்து இதுவரை தொகுத்திருக்கும் புத்தகங்கள் 14. எழுதியிருக்கும் புத்தகங்கள் 12. இப்போது 15 ஆவது தொகுப்பாக அவர் வெளிக் கொணர்ந்திருக்கும் புத்தகம் "திரை உலகில் செல்வி ஜெயலலிதா'.
கவிஞர் செல்லமுத்து திரையுலகில் பணியாற்றியவரோ, திரையுலகத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டவரோ அல்லர். கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டத்தில் இருக்கிறது ஏ.சித்தூர் கிராமம். இந்தக் கிராமத்திலுள்ள சின்னப் பண்ணையம் இல்லம்தான் கவிஞர் செல்லமுத்துவின் வசிப்பிடம். கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றி பணி ஓய்வு பெற்ற ஒருவர், தமிழ் சினிமா என்கிற பெருங்கடலில் முத்துக் குளித்துத் தேடித் தந்திருக்கும் தகவல் களஞ்சியம்தான் "திரை உலகில் செல்வி ஜெயலலிதா'.
ஜெயலலிதா நடித்த ஒவ்வொரு திரைப்படம் குறித்தும் கதையுடன் கூடிய குறிப்பு, அந்தப் படத்தில் நடித்தவர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரம்; அதில் இடம் பெற்ற பாடல்கள், பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர் குறித்த தகவல்கள். இப்படி எல்லா விவரங்களும் அடங்கிய தொகுப்பில், அவருடன் இணைந்து நடித்தவர்கள், பின்னணி பாடியவர்கள், இயக்குநர்கள் என்று தனித்தனியாகப் பிரித்தும் வழங்கியிருக்கிறார்.
ஜெயலலிதா என்கிற நடிகை தொடர்பான எல்லா திரையுலகத் தகவல்களையும் ஒரே இடத்தில் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் கவிஞர் பொன். செல்லமுத்துவின் "திரை உலகில் செல்வி ஜெயலலிதா' புத்தகத்தைப் புரட்டினால் போதும்.
ஜெயலலிதா குறித்து மட்டுமல்ல, அவரது தாயார் சந்தியா, சித்தி வித்யாவதி ஆகியோர் நடித்த படங்கள் பற்றிய குறிப்புகளும் இதில் இணைக்கப்பட்டிருக்கின்றன.
ஜெயலலிதா தொடர்புடைய புகைப்படங்கள்தாம் இந்தத் தொகுப்பின் சிறப்பம்சம்.