Description
மேல்நாட்டு இலக்கிய வடிவமான சிறுகதைக்கு இந்திய உருவம் கொடுத்தவர் ந. பிச்சமூர்த்தி என்ற க.நா.சு.வின் கூற்று முற்றிலும் உண்மை என்பது அவரது சிறுகதைகளை மீள்வாசிப்புக்கு உட்படுத்தியபோது உறுதியாகிறது. அதேபோல் தமிழில் புதுக்கவிதையின் தந்தை என்று கருதப்படுபவரும் ந. பிச்சமூர்த்தியே ஆவார். சி.சு. செல்லப்பாவின் எழுத்து பத்திரிகை 1959 ஜனவரியில் தொடங்கி 1970 ஜனவரியில் முடிவுக்கு வந்தது. மொத்தம் 119 இதழ்கள். முதலில் மாதப் பத்திரிகை; பிறகு காலாண்டு. முதல் இதழில் வெளிவந்த பிச்சமூர்த்தியின் பெட்டிக்கடை நாரணன்தான் தமிழில் வெளிவந்த முதல் புதுக் கவிதை. இன்றைய தினம் புதுக்கவிதை எழுதுகின்ற அத்தனை பேரும் நன்றி கூற வேண்டியது ந. பிச்சமூர்த்திக்கு. இவ்வளவுக்கும் அவர் தன்னை ஒரு எழுத்தாளன் என்றே சொல்லிக்கொள்ளத் தயங்குகிறார். பிச்சமூர்த்தியை முழுதாகப் படித்தபோது இன்னொரு முக்கியமான விஷயத்தை அவதானித்தேன். அவருடைய கவிதை, சிறுகதை அனைத்தும் இன்று எழுதியது போல் அவ்வளவு சமகாலத் தன்மை கொண்டதாக இருக்கிறது. சுதந்திர தின ஆர்ப்பாட்டங்களைக் கிண்டலடித்து எழுதிய வெள்ளி விழா என்ற கவிதை ஓர் உதாரணம்