Description
முப்பதாண்டுகள் வழக்கறிஞராகவும் சுமார் ஏழு ஆண்டுகள் நீதிபதியாகவும் பணியாற்றி ஓய்வுபெற்ற நீதிபதி கே. சந்துருவின் தன் வரலாறெனக் குறிப்பிடப்பட்ட வரலாற்றுப் பதிவுகளின் தொகுதி இது.
நூலில் 22 தலைப்புகளில் தாம் எடுத்துக் கொண்ட பொருள்களின்வழி தன்னுடைய வரலாற்றை மட்டுமல்லாமல், குறிப்பிட்ட காலகட்டத்தின் அல்லது பிரச்னையின் வரலாற்றையும் விரிவாக எடுத்துச் சொல்கிறார் சந்துரு.
எண்ணற்ற மனித உரிமை வழக்குகளில் வாதாடி வெற்றி பெற்றவர்; மக்கள் கொண்டாடிய எண்ணற்ற தீர்ப்புகளை வழங்கியவர் என்ற வகையில் அந்தந்த காலகட்டத்தையொட்டி, அவருடைய வாழ்வனுபவங்களே வரலாறாகியுள்ளன.
சட்டம் செயல்படும் விதம், நீதிமன்றங்களின் செயல்பாடுகள், வழக்குரைஞர்களின் தொழில் நடைமுறைகள், நீதிபதிகளின் சிந்தனை வெளிப்பாடுகள் எல்லாவற்றையும் கோவையாக இணைத்துக் கொடுத்திருப்பதாக நூலாசிரியர் குறிப்பிட்டிருப்பது ஒவ்வொரு தலைப்பிலும் பளிச்சிடுகிறது.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மாணவர் உதயகுமார் கொலை வழக்கு தொடர்பாக நூலாசிரியர் கொடுத்துள்ள தகவல்களும், நடைமுறைகளும் இளைய தலைமுறையினருக்கு ஒரு புதிய அதிர்வனுபவமாகத் தோன்றக் கூடியவை.
'ஒரு அப்பா தனது மகனை, இவன் என் மகனில்லை என்று சாட்சி சொல்ல வைத்த இந்த அமைப்பையும் அதன் பின்னாலிருந்த மனிதர்களையும் இன்றைக்கும் என்னால் மறக்க முடியாது'' என்கிறார் சந்துரு.
'பெரியாரைப் போற்றி'ய கட்டுரையில் அவருடைய பேச்சுகள், எழுத்துகள் யார் உடைமை? என்பது தொடர்பாகக் கறாரான தீர்ப்பளித்து ஒரு முடிவை ஏற்படுத்திய நீதிபதி சந்துரு, அவை தொடர்பான வழக்கு விவரங்களை விரிவாக நினைவுகூர்ந்திருக்கிறார். தடா, பொடா வழக்குகள் பற்றிய விவரணங்களின்போது அன்றைய அரசுகளின் அணுகுமுறை பற்றியும் விவரித்திருக்கிறார்.
'நானும் நீதிபதி ஆனேன்' என்ற நிறைவுக் கட்டுரை, சந்துரு நீதிபதியான கதையை ஒரு நாவலுக்குரிய பரபரப்புடன் கொண்டு செல்கிறது.