Description
இது என் சுயசரிதை அல்ல. இந்திய ஆட்சிப்பணியில் பணிபுரிந்தபோது எனக்குக் கிடைத்த சில அனுபவங்களைப் பற்றியும், திரைப்படத் தணிக்கை அதிகாரியாக செயல்பட்ட போது எதிர்கொண்ட சில விஷயங்களைப் பற்றியும், தமிழ்த் திரைப்பட இயக்குநராக இயங்கியபோது இருந்த சூழ்நிலைகளைப் பற்றியும் பதிவு செய்யும் முயற்சியே இது. ஒரு நெருங்கிய நண்பரிடம் பேசுவது போன்றுதான் நான் இவற்றைப் பதிவு செய்திருக்கிறேன்.
பொதுவாக மக்கள்மத்தியில் ஒரு கருத்து பரவலாக இருப்பதைப் பார்க்கலாம். ஐஏஎஸ் அதிகாரிகள் பொதுவாக விஷயஞானமும் நேர்மையும் உடையவர்கள் என்றும் அரசியல்வாதிகள் பொதுவாக அறிவு குறைந்தவர்கள்; ஊழலில் திளைப்பவர்கள் என்றும் மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் உண்மை நிலை வேறு.
நான் ஒரு நேர்மையான மனிதாபிமானமிக்க அதேசமயம் வேகமாகச் செயல்படுகிற அதிகாரியாக இருக்க வேண்டும் என்று தொடக்கத்திலேயே தீர்மானித்துக் கொண்டேன். ஐஏஎஸ் அதிகாரிக்குத் தரப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தை, மக்களுக்குப் பயனுள்ள விதத்தில் உபயோகிக்க முயலும் அதிகாரியாகவே நான் என் பணிக்காலம் முழுவதும் செயல்பட்டேன்.