Description
புத்தகங்களைப் பற்றிய புத்தகங்கள் என்ற வகைமையில் தமிழில் வெளிவந்துள்ள நூல்கள் மிகக்குறைவு. அப்படி வந்தவையும் கூட புனைவுகளையும் இலக்கியப் படைப்புகளையும் பற்றி எழுத்தாளர்களும் விமர்சகர்களும் எழுதியவையே. இத்தகைய சூழலில் இந்தக் கட்டுரைத் தொகுப்பு முக்கியமானதும், தனித்துவமானதும், ஒருவகையில் புதுமையானதும் ஆகும்.
காஷ்மீர் முதல் யுத்தம், சரஸ்வதி நதி, இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி, பிரிட்டிஷாரின் ஆட்சிக்கு முன்பான நம் பாரம்பரியக் கல்வி, தொழில்நுட்பம், கீழ்வெண்மணி படுகொலை, மரீஜ்ஜபி படுகொலை, சிலைத் திருட்டு, தலித் அரசியல், பாகிஸ்தான் -இந்தியப் பிரிவினை, வட கிழக்குப் பிரிவினைவாதம், ஆர்.எஸ்.எஸ்., இலங்கைப் பிரச்னை என தமிழ் மற்றும் இந்திய அரசியல், சமூக, வரலாற்றுக்களத்தின் முக்கிய விஷயங்கள் அனைத்தையும் பற்றி எழுதப்பட்ட ஆகச் சிறந்த படைப்புகளின் சாரம்சங்கள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன.
ஒட்டுமொத்தமாக இந்தக் கட்டுரைத் தொகுப்பை மதிப்பிடுவதென்றால், இது ஒரு வழக்கமான புத்தக விமர்சன நூல் அல்ல. தேர்வு செய்யப்பட்டுள்ள புத்தகங்களின் வீச்சும், ஆழமும் பரந்துபட்டது. இதில் அலசப்படும் புத்தகங்களில் பாதிக்கு மேற்பட்டவை மொழிபெயர்ப்பு நூல்கள். சிந்தனைத் தேடலும், வாசிப்பில் ஈடுபாடும் கொண்ட தமிழ் வாசகனை முன்னிட்டே இதில் உள்ள கட்டுரைகள் அனைத்தும் எழுதப்பட்டுள்ளன என்றாலும், இந்த நூலின் கரிசனம் என்பது வெறுமனே ‘புத்தகம்’ மற்றும் ‘வாசிப்பு’ மட்டுமே சார்ந்தல்ல. இந்த தேசம், இதன் மரபார்ந்த விழுமியங்கள், இதன் ஆதார சுருதியான இந்துப் பண்பாடு, இவற்றின் மகத்துவம், இவை எதிர்கொள்ளும் அபாயங்கள் அச்சுறுத்தல்கள். இது அனைத்தையும் குறித்த எண்ணங்களும் தேடல்களுமே இந்தக் கட்டுரைகள் எழுதப்படுவதற்கு உந்துவிசையாக இருந்திருக் கின்றன. இந்தச் சிந்தனைக் கீற்றுகளே தமிழ் வாசகப்பரப்புக்கு இத்தகைய தொகுப்பு அளிக்கும் பெருங்கொடையாக இருக்கும்.
-ஜடாயு,