Description
யயாதி என்ற புகழ் பெற்ற நாவலில் யயாதி மகாராஜா தன் கதையைத் தானே கூறுவது போல அமைத்திருந்தார், வி.ஸ. காண்டேகர், மராட்டிய மொழியில் வெளிவந்த இந்த நாவல், 'பாரதீய ஞான பீட விருது பெற்றது. இதைத் தமிழில் அருமையாக மொழிபெயர்த்திருந்தார் கா.ஸ்ரீ.ஸ்ரீ.
அதே போல, `நான், கிருஷ்ண தேவராயன்' என்ற இந்த நாவலை கிருஷ்ண தேவராயர் தானே தன் கதையைக் கூறுவது போல, ரா.கி.ரங்கராஜன் எழுதியிருக்கிறார். மொழி, நடை எளிமையாக இருந்தாலும், இந்த நாவலை எழுத ரா.கி.ரங்கராஜன் கடுமையாக உழைத்திருக்கிறார்.
கதையில் ஒரு இடத்தில் நட்சத்திரங்களின் நிலையை வைத்து, அரசா எதிரியை வீழ்த்துவது போல எழுதியிருப்பார். இதைப் படித்த விஞ்ஞானி ஒருவர் தான் எழுதும் புத்தகத்துக்கு, இவரிடம் உதவி கேட்டாராம். அந்த அளவுக்கு சிறு சிறு விஷயங்களை கவனித்து எழுதியிருப்பது அருமை.
இந்தப் புத்தகம் கிருஷ்ண தேவராயரின் அரசியல் வாழ்க்கையைப் பற்றி அதிகம் சொல்லாமல், அவரது காதல் வாழ்க்கையைச் சொல்கிறது. மேலும், அந்தக் காலச் சமூக பழக்க வழக்கங்களையும் சொல்லியிருக்கிறார்.
உடன் கட்டை ஏறுதல், கணவனுடைய வலப்புறத்தில் இருத்தல், இடக் கையால் வெற்றிலையை எடுத்த பாபம் தீர கோவிலுக்குச் செல்லுதல், தண்டனை முறைகள், தேவதாசி முறை என்று பலவற்றையும் அரசன் பார்வையில் எழுதியிருக்கிறார்.
விறுவிறுப்பான ஒரு சரித்திர நாவல். கண்டிப்பாக படிக்க | வேண்டிய கதை என்று ஏராளமான வாசகர்கள் இணையதளத்தில் தெரிவித்துள்ளனர்.
நீங்களும் படித்து ரஸியுங்கள்...!