Description
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்க்கை அனுபவங்கள் அடங்கிய 'உங்களில் ஒருவன்' (பாகம் -1) என்ற சுயசரிதையை எழுதியுள்ளார். இதில், அவரது பள்ளி- கல்லூரி காலங்கள், இளமை பருவம், ஆரம்ப நிலை அரசியல் பங்களிப்பு, திருமண வாழ்க்கை, மிசா போராட்டம் என 1976ஆம் ஆண்டு வரை உள்ள 23 ஆண்டு கால நினைவுகளை பதிவு செய்துள்ளார்.
முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினின் தன் வரலாற்று நூலின் முதல் பாகத்தில், அவரின் 23 வயது வரையிலான வாழ்க்கை இடம் பெறுகிறது.
நாலரை மாதக் கைக் குழந்தையாகத் திருச்சி சிறைக்கு (கல்லக்குடி பெயர் மாற்றப் போராட்டத்தில் ஈடுபட்ட) தந்தை கருணாநிதியைப் பார்க்கச் சென்ற
ஸ்டாலின், இளைஞனாக அவசர நிலை காலத்தில் கைது செய்யப்பட்டு சென்னை சிறைவாசம் வரையிலான வரலாற்றுப் பதிவு இந்த நூல்.
சிறு வயதில் இலக்கை மிகச் சரியாகத் தீர்மானித்தால் வெற்றி பெற முடியும் என்பதுதான் இன்றைய தலைமுறைக்கு நான் சொல்லும் ஒற்றை வழிகாட்டி நெறிமுறை' என்று ஸ்டாலின் குறிப்பிடுகிறார். நூல் நெடுகிலும் ஸ்டாலின் வாழ்க்கையுடன் அரசியல் நிகழ்வுகளையொட்டிய தலைவர்களின் பேச்சும் எழுத்தும் சிறப்பாக எடுத்தாளப்பட்டுள்ளன.
பாட்டி அஞ்சுகம் அம்மையார் பற்றிய நினைவுகள், கருணாநிதிக்கு மட்டுமல்ல, அண்ணா, எம்ஜிஆர், சிவாஜி என அன்றைய தலைவர்களுக்கும் அவர் அன்னையாகத் திகழ்ந்தது பற்றிய குறிப்புகள் நெகிழ்ச்சியானவை.
மாணவர்கள் இலவச பேருந்துப் பயணம் தொடங்கியதற்கு விடை இந்நூலில் இருக்கிறது. ஆண்டு வரிசைப்படி என்றில்லாமல் வாழ்க்கை நிகழ்வுகளையொட்டி அரசியலுடனேயே வரலாறு நகர்வதும் நல்ல உத்தி. இளைஞர் தி.மு.க., அண்ணாவுடன் அணுக்கம், சைதை பிரசாரம், முரசே முழங்கு விழாவில் கருணாநிதி, எம்ஜிஆர் பேச்சு, மோதிரம் அணிவித்தபோது எழுந்த நினைவு, மாநாடாக நடந்த திருமண நினைவுகள்... எனச் செல்கிறது நூல்.
மு.க. ஸ்டாலின் தொடர்பான புகைப்படங்களில் பலவும் இடம் பெற்றிருப்பது சிறப்பு. சிறப்பானநூல் தயாரிப்பு. நூலைப் படித்து முடித்ததும் கருணாநிதியின் நெஞ்சுக்கு நீதியையும் மீண்டும் ஒருமுறை படிக்க வேண்டும் என்று நினைக்கச் செய்வது உங்களில் ஒருவனுடைய வெற்றி.