Description
புகைப்படத்தில் நிற்கும் ஆள் ஒரு அசாத்தியமான கை. உலகப்புகழ் பெற்ற புகைப்படக்காரர், ஷெல்லி, பைரவன், வில்லியம் சேகரை விடவும் அதிகமான காதல்கவிதை மடல்களை வரைந்து லட்சக்கணக்கான கன்னியர்களின் இதயத்தில் வாடகை தராமலேயே முப்பத்தைந்து ஆண்டுகளாக குடியிருக்கும் உள்ளம்கவர் கள்வன். தற்புகழ்ச்சியை விரும்பாதவர்.
உலகில் மிக உயர்ந்த படிப்பான காட்சித் தொடர்பியலை மூன்றே ஆண்டுகளில் படித்து ஒரே மூச்சில் பட்டம் பெற்றார் என்றால் அது மிகையில்லை. கல்வித் தாகம் தணியாமல் குடிக்கத் துவங்கிய முதுகலை அறிவியில் மின்னணு ஊடகவியலை சக மாணவக் கன்னியர்களின் காதல் இம்சை தாளாமல் தியாகம் செய்து, மேலும் கோயமுத்தூரில் கருவாட்டுக் குழம்பு சரியாகக் கிடைக்காத விரக்தியில் தாயகமான நாகர்கோவிலுக்குத் திரும்பினார். இங்கும் கலைத்தாகம் முற்றியதில் முதுகலை ஊடகவியல் படித்துவிட்டு, அதிலுள்ள ஒரே ஒரு பாடமான இந்திய அரசியலமைப்பும், ஊடகச் சட்டங்களும் எனும் தலைப்பு இவரை மிகுந்த துக்கத்தில் ஆழ்த்தியதால், மேற்கூறிய பாடத்தின் தேர்வன்று திரையரங்கில் அமர்ந்து அமர்ந்து தூங்கியதில் தூங்கியதில் முதுகலைப் பட்டம் கைவறிக் கீழே விழுந்தது.
'குடி'யாண்டவர்கள் என்று அன்போடு அழைக்கப்படும் உற்சாகபான மிஞ்சிகளை (பானநேசர்கள்) இந்த அரசுகள் ஒன்றிணைந்து மதுச்சாலைகள் அவர்களுக்கும் பரமண்டலத்துக்குமான இணைப்புப் பாலமொன்றை தொகுதிவாரியாக இணைத்து கட்டி பரமண்டலத்துக்கும் பானப் பயனாளிகளுக்கும் ஒரு நல்லுறவை ஏற்படுத்தி, மேற்கூறிய கனவான்கள் இறைவனடி சேரும் திட்டத்தை அமல்படுத்தியதன் மூலம் மக்கள் தொகை நெருக்கத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள்.
ஆதிகாலத்திலிருந்தே பானமெனும் அருமருந்தைத் தங்கள் நாவுகளால் தீண்டி, சொர்க்கத்தை அருகில் வரவழைக்கும் மாமனிதர்கள் குறித்த பன்னிரெண்டு சிறுகதைகள் அடங்கிய இந்தப் புத்தகத்தை இவர் தொடர் ஆராய்ச்சிகளின் வாயிலாகக் கண்டறிந்ததாக பி.பி.சி செய்திகளிடம் தெரிவித்தார்.