Description
இன்றைய செய்தி நாளைய வரலாறு” எனக் கூறப்படுவதுண்டு. இதை நாம் சற்று சிந்திப்போம். இன்றைய நாளிதழ்களில் வரும் செய்திகள், வாரமாத இதழ்களில் வரும் செய்திகள், தொலைகாட்சி, இணைய தளங்களில் வரும் செய்திகள் எத்தனை சதவீதம் உண்மையாக இருக்கின்றன. கட்சி அல்லது அமைப்பு சார்ந்த ஊடகங்கள் தரும் செய்திகளில் 50 சதவீதம் கூட உண்மை இருப்பதில்லை. நடுநிலை என்று கூறப்படும் ஊடகங்கள் தரும் செய்திகளில் கூட குறைந்தது 20 சதவீதமாவது உண்மையாக இருக்க வாய்ப்பு இல்லை. இத்தகைய செய்திகள்தாம் 100 அல்லது 200 ஆண்டுகளுக்குப் பின் வரலாறாக மாறக்கூடியன.
அப்போது இந்த வரலாறு எப்படி இருக்கும்? பொய்யும் புனை சுருட்டும் கொண்டதாகத்தான் இருக்கும். இவ்வாறுதான் 100 அல்லது 200 ஆண்டுகளுக்கு முன் நம் நாட்டை ஆட்சி செய்த ஆங்கிலேயர்கள் இஸ்லாத்துக்கு விரோதமாக மனம்போன போக்கில் வெளியிட்ட செய்திகள் மற்றும் ஆவணங்கள் இன்று வரலாறாக மாறி பள்ளி மற்றும் கல்லூரிகளின் பாடத்திட்டங்களில் இடம் பெற்றுள்ளன. இந்த வரலாற்றைப் படிப்பவர்கள் அன்றைய இஸ்லாமிய மன்னர்களும் தலைவர்களும் மதவெறி பிடித்தவர்கள் , இந்து ஆலயங்களை இடித்து அங்குள்ள செல்வங்களைக் கொள்ளையிட்டவர்கள் என்று நம்பி விடுகிறார்கள்.
“ இல்லை! இல்லை! இந்த வரலாறு பொய்யானது; உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளது “ என விளக்கும் முகத்தான் “ மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு “ என்ற நூலை எழுதி இருக்கிறார் எனது மாணவர்களில் ஒருவரான அதிரை இப்ராஹீம் அன்சாரி அவர்கள். இந்நூலை சென்னை சாஜிதா புக் சென்டர் அவர்கள் வெளியிட்டு இருக்கிறார்கள். 176 பக்கங்கள் கொண்ட அழகிய அச்சுடன் கூடிய பதிப்பில் வெளிவந்துள்ள இந்நூலின் விலை ரூ. 100/= ஆகும்.
அதிரை இப்ராஹீம் அன்சாரி அவர்கள் ஆன்மிகம், சமூகவியல், சூழியல், பொருளியல் , அரசியல் கல்வி இயல் சார்ந்த பல கட்டுரைகளை இணையம் மற்றும் அச்சு ஊடகங்கள் வழியாக எழுதி இருந்த போதிலும், “ மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு “ என்ற நூல் வழியாக இஸ்லாமிய சமுதாயத்துக்குப் பெரும் நன்மை புரிந்துள்ளார். இஸ்லாமிய வரலாற்றில் நேர்ந்துள்ள கறைகளைப் போக்கிட முயன்றுள்ளார். இஸ்லாமிய சமுதாயத்தின் சார்பாக அவருக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்.
ஒளரங்கசீப் அவர்களில் தொடங்கி இந்திய விடுதலைப் போரில் உலமாக்களின் பங்கு வரை 32 ஆய்வுக் கட்டுரைகளைத் தன் நூலில் தந்துள்ளார். இவற்றின் மூலம் இருட்டடிப்பு செய்யப்பட்ட உண்மை வரலாற்றை வெளிச்சத்துக்கு கொண்டுவருவதற்காக அன்சாரி அவர்கள் மேற்கொண்ட முனைப்பு அளப்பரியது. பல்வேறு நூலகங்களுக்கும் சென்று 30 க்கும் மேற்பட்ட நூல்களைப் படித்து ஆய்வு செய்து தேவையான ஆதாரத் தகவல்களைத் திரட்டியுள்ளார். அவர் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நூல்களில் பெரும்பாலானவை மனச்சாட்சியும் நடுநிலையும் கொண்ட சகோதர மதத்தைச் சார்ந்த வரலாற்று ஆசிரியர்களின் நூல்களாகும். அவர்களில் டாக்டர் பட்டாபி சீத்தாராமையா , ஆர். என். அகர்வால், பேராசிரியர் கே.. கே. தத்தா, மா.அ. அண்ணாமலை, எஸ். மாணிக்கம், கே. அருணாசலம், ந. ராமையா, எம். சுப்ரமணிய அய்யர், ஜவஹர்லால் நேரு, கே. ராஜையா, மயிலை சீனி வேங்கடசாமி போன்றவர்கள் முக்கியமானவர்கள்.
இருட்டடிப்புக்குள்ளான இஸ்லாமிய வரலாற்று நாயகர்களில் முதன்மையான “ ரஹ்மத்துல்லாஹ்” என்ற சிறப்பு சொல் கொண்டு நம்மால் அழைக்கப்படுகின்ற மாமன்னர் ஒளரங்கசீப்தான். மனச்சாட்சியற்ற வரலாற்றாசிரியர்களுக்கு ஒளரங்கசீப்மீது ஏன் அத்துணை வெறுப்பு? அதற்கு சரியான விளக்கம் தருகிறார் நூலாசிரியர். வெறுப்புக்கான அடிப்படைக் காரணம் ஒளரங்கசீப்புடைய அசைக்க முடியாத ஈமானும் இறையச்சமுமே ஆகும் . மொகலாய மன்னர்களிலேயே நீண்டகாலம் ( 1657-1707) இந்தியாவில் கோலேச்சியவர் என்பதும் ஒரு காரணம். ஒளரங்கசீப் ஒரு காய்த்தமரம் அதனால்தான் பலரின் அதிகபப்டியான கல்லடிக்கு ஆளானார் என நூலாசிரியர் தொடங்கி இருப்பதில் இருந்தே அந்த வரலாறு களைகட்டி விடுகிறது. அந்தக் கருத்தும் அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதே.
மெளலானா அஹமதுல்லாஹ் ஷா அவர்களின் தலையும் உடலும் துண்டு துண்டாக்கப்பட்ட வரலாறை மெய்சிலிர்க்கும்வண்ணம் நூலாசிரியர் விவரித்துள்ள எழுத்துநடை காட்சிகளை நமது கண்முன் நிறுத்துகிறது.
இந்திய சுதந்திரப் போரில் முஸ்லிம்களின் பங்களிப்பானது மிகத் திட்டமிட்டுத் திரிக்கப்பட்டும் மறைக்கப்பட்டும் உள்ள விபரங்களை, தீரன் திப்பு சுல்தான், மன்னர் பகதூர்ஷா ஜாபர், பேகம் ஹஜ்ரத் மஹல், மெளலானா முகமது அலி, சவுகத் அலி, உமர் சுப்ஹாணி உள்ளிட்ட பல முஸ்லிம்களின் உண்மை வரலாற்றின் வாயிலாக உணர்த்துகிறார்.
குறிப்பாக திப்பு சுல்தானின் வரலாற்றைப் படிக்கும்போது பல உண்மைகளை உணர முடிகிறது. இந்தியா பல மாவீரர்களைக் கண்டிருந்தாலும் திப்புசுல்தானுக்கு இணையான ஒரு விடுதலை வீரனை ஒப்பிட முடியாது. எதிரிகளுடன் சண்டையிட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் வேளையில் சரணடைந்தால் உயிர் பிழைக்கலாம் என்கிற நிலை வந்த போது “ ஆடுகளைப் 200 போல் ஆண்டுகள் வாழ்ந்து பிழைப்பதைவிட புலியைப் போல் 2 நாட்கள் வாழ்ந்து மடியலாம் என்று திப்பு என்கிற அந்த சிங்கம் சிலிர்த்தெழுந்தது. என்பதாக , அன்சாரி திப்புவின் வீரத்தை விவரிக்கிறார்.
இன்றைய ஏவுகணைத் தொழில் நுட்பத்தின் தந்தை திப்பு சுல்தானே . அவர்தான் குறுந்தொலைவு பாய்ந்துதாக்கும் ஏவுகணைகளைத் தயாரித்துப் பயன்படுத்தினார். இது குறித்து , முன்னாள் ஜனாதிபதி ஏ. பி. ஜே. அபுல் கலாம் அவர்கள் தனது அக்னி சிறகுகள் நூலில் தான் பயிற்சி பெறுவதற்காக நாசா சென்றிருந்தபோது அங்கு திப்புவின் மாதிரி ராக்கெட்டை கண்ட அனுபவம் மற்றும் பெருமை நிறைந்த உணர்வுகள் பற்றிய குறிப்பை நூலாசிரியர் எடுத்தாண்டிருக்கிறார்.
இப்ராஹீம் அன்சாரி அவரகளின் “ மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு “ என்ற இந்த நூலை வாசிக்கும் நாம் பல்வேறு உணர்ச்சிகளுக்கு ஆளாவதைத் தவிர்க்க முடியாது. முஸ்லிம்கள் 300 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியத் திருநாட்டை ஆட்சி செய்துள்ளார்கள் என்பதை அறியும்போதும், இந்திய விடுதலைக்காக முஸ்லிம்கள் பலர் உயிர்த் தியாகம் செய்துள்ளார்கள் என்பதை அழகிய தமிழில் அறியும்போதும் நாம் பெருமிதம் கொள்கிறோம். விடுதலைப் போரில் ஈடுபட்டு ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு கொடுமைக்குள்ளாக்கப்பட்டு வேதனையுற்ற முஸ்லிம்களின் வரலாற்றையும் நீண்ட பட்டியலையும் அறியும்போது துயரம் கொள்கிறோம். அதே நேரத்தில் இந்த அளவுக்கு உண்மை வரலாற்றை மதச் சாயம் பூசி மறைத்துள்ளார்களே என்பதை உணரும்போது கோபம் கொள்கிறோம். நூலை வாசிக்கத் தொடங்கினால் இடையில் நிறுத்தாமல் முழுதும் வாசித்த பிறகுதான் நூலை வைக்க முடியும் என்ற முறையில் எழுதி இருப்பது நூலாசிரியரின் எழுத்து நடைக்கு சான்று பகர்கிறது.