Description
கணினி அறிவியல் தொழில்நுட்பம் பயின்று அமெரிக்காவில் குடிபுகுந்த தமிழரான ச.சுரேஷ் எழுதிய முதல் சிறுகதைத் தொகுப்பு இது. ஆங்கிலத்தில் பல
கட்டுரைகளை அவர் எழுதியிருந்தாலும், 40 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு தமிழில் எழுதியிருக்கும் சிறுகதைகள் இவை. எழுத்து நடையும், மொழி ஆளுமையும் சிறுகதைகளில் கையாளப்பட்டிருக்கின்றன.
நூல் முழுவதும் பெண்ணியம் சார்ந்த விஷயங்களும், அவர்களது உளவியல் போராட்டங்களும் பேசப்பட்டிருக்கின்றன. கதையின் மாந்தர்கள் நம்மைச் சுற்றியிருக்கும் சக உறவுகளைப் போல வடிவமைக்கப்பட்டிருப்பதால் வாசகனிடம் அவை நெருக்கம் கொள்கின்றன.
பிச்சைக்காரி, சித்ரா பெளர்ணமி, தாரணி, மெளனமான கதறல், தண்டவாளம் உள்ளிட்ட சிறுகதைகள் வாசிப்புக்குப் பிறகு நினைவு அடுக்குகளில் நிறைந்து கொள்ளும் ரகம். சமூகத்தில் சமுத்துவம் இல்லாமல் போனதற்கும், பாலியல் வன்கொடுமைகள், குடும்ப வன்முறைகள் அதிகரிப்பதற்கும் தன்னை சரியானவர்கள் என நினைத்துக் கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் தவறுகள்தான் காரணம் என்ற உண்மையை இக்கதைகள் உணர்த்துகின்றன.
பெண்ணியத்தை ஒரு குறியீடாகப் பயன்படுத்தி வெளிவரும் படைப்புகளுக்கு நடுவே பெண்களின் உள்ளார்ந்த வலிகளை உணர்த்தும் பதிவாக வெளிவந்திருக்கிறது தண்டவாளம்.
பெண்ணியத்தையும், சமூகத்தில் நாம் காணும் சமத்துவமின்மையையும் மையமாகக் கொண்ட சிறுகதைகள் இவை. 50 சொற்களையே கொண்டுள்ள சின்னஞ்சிறு கதையும் சிறுகதை தான், 5000 சொற்களைக் கொண்டுள்ள குறும் புதினம் என்று கூறத்தக்க கதையும் சிறுகதைதான் என்ற சிறுகதையின் இலக்கண எல்லைகளை எதிர் கொண்டுள்ளன இத்தொகுப்பில் உள்ள கதைகள். பாலியல் வன்முறையும், குடும்ப வன்முறையும் இக்கால வாழ்வின் ஒருபகுதி உண்மைகள். இத்தகைய கொடுமைகள் குறித்து விழிப்புணர்வு தரும் இக்கதைகள் விவாதத்திற்குரியவை.