Description
ரிஸ்மியாவின் கவிதைகள் வழக்கமான ஒரு நிகழ்ச்சியின் பிறழ்வாக பழுத்த இலை பூமியை நோக்கி விழுவதுபோலத் தெரிவற்று மருகி வீழ்கின்றன. பெரும்பாலான கவிதைகளில் தனிமை அடிக்குறிப்பாகவோ குறியீடாகவோ முனகியும் திமிறியும் மருகியும் சாரமாகிறது. தனிமை இவர் கவிதைகளில் மையத்தில் இல்லை. மகிழ்ச்சியான தனிமையும் இல்லை. சொந்தமற்ற, ஒருபோதும் முழுமையாக உணராத வெற்றுத்தனிமை. தனிமையால் அவள் அழியும் முன், அவளை மையத்தில் நிறுத்தி காப்பாற்றும் அதிசயமாகக் கவிதைகள் மாறுகின்றன.
’சொல்லில் சரியும் சுவர்கள்’ கவிதைத் தொகுப்பில் சுவர் ஓர் அடையாளம். தன்னை மனித உயிரியாகப் பார்க்காத சமூகத்தில் பாகுபாடு, பாரபட்சம், பாலின வேறுபாடு, இனவெறி ஆகியவற்றைச் சுவர் அடையாளப்படுத்துகிறது. வெறுமனே சடப்பொருளாக இருக்கும் அவளது கனவுகளில் சூழ்நிலையில் இருந்து எழுந்து வெளியேவர முடியாமல் தடுக்கும் சமூகத்தின் நிழலும் மெய்யுமாகச் சரியும் சுவர் இங்கு கனதியான கருப்பொருள். ஒரு தீங்கின் குறியீடு.
கூரான சொல்லாயுதங்கள், புதிய வேகம், தெளிவு, நுட்பங்களுடன் கவிதைக் களத்தில் நுழைந்திருக்கும் ரிஸ்மியாவை நெஞ்சணைக்கிறேன். இலங்கையின் மத்திய மலை நாட்டில் மலர்ந்திருக்கும் மஞ்சள் பூ இவர், தமிழ் கவிதை உலகுக்கு புது நம்பிக்கை. லாவுலுச் சதையின் மஞ்சள் குழைத்து…. என ரிஸ்மியாவின் கவிதையில் வரும் லாவுல் பழத்தின் (Lavul Fruit) மஞ்சள் நிறமாகவே இவரின் படைப்பு மனதைக் காண்கிறேன். மஞ்சள் சூரியனுடன் தொடர்புடைய நிறம். இது நம்பிக்கை, ஆற்றல், மகிழ்ச்சி, நட்பு போன்றவற்றைப் பிரதிபலிப்பது.லாவுல் பழத்தின் மஞ்சளாக ரிஸ்மியாவின் கவிதைப் பிரவேசம் பிரகாசிக்கட்டும்!