Description
ஆதிச்சநல்லூரின் தாழிகளை, இருக்கும் இடத்திலேயே பார்த்து மகிழவும், வரவிருக்கும் மத்திய அகழாய்வுத் துறை அருங்காட்சியகத்தின் விளக்கங்களையும், திருநெல்வேலியில் அமைக்கப்படவுள்ள மாநில அகழாய்வுத் துறை அருங்காட்சியகம் குறித்தும் நூல் எடுத்துரைக்கிறது.
நூலுக்கு மெருகேற்ற பல்வேறு காலங்களில் ஆதிச்சநல்லூர் குறித்து வெளியிடப்பட்ட ஆங்கிலம், தமிழ் அறிக்கையின் முழு வடிவங்களை 'க்யூ ஆர்' கோடு மூலம் பார்க்கும் வசதி உள்ளது. இதில் முனைவர் சத்தியபாமாவின் அறிக்கையும் (2004), அதே ஆண்டில் அகழாய்வு செய்த முனைவர் சத்தியமூர்த்தி மதுரை உயர்நீதிமன்றத்தில் ஒப்படைத்த முன்னோடி அறிக்கையும் அடங்கும். முற்கால ஆய்வாளர்களின் ஆங்கில அறிக்கைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
ஆதிச்சநல்லூர் வாழ்விடங்களைத் தேடிய ஆய்வு, கொற்கை, மருதூர் அணைப்பகுதியில் தொல்லியல் ஆய்வு மேற்கொள்ள வழக்கு, 2008-இல் வெளியான ஆதிச்சநல்லூர் கட்டுரையில் உள்ள ஆச்சரியங்கள், முதல்வர் அறிவித்த தன்பொருநை நாகரிகம், கொற்கையில் நான்கு அடுக்கு கொண்டு திரவப் பொருள்கள் வடிகட்டும் சுடுமண் குழாய் கண்டுபிடிப்பு, பொருநை ஆற்றங்கரை குறித்த அறிக்கைகள் என பொருளடக்கத்தில் உள்ள ஒவ்வொரு அத்தியாயங்களையும் வாசிக்கும்போது வரலாற்று நிகழ்வுகள் ஒவ்வொன்றும் எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர முடிகிறது. தொல்லியல் துறையின் நடப்பு நிகழ்வுகளைக் காட்டும் நூலாக உள்ளது.