Description
மானுட வாழ்வின் குறிக்கோள்களாக அமைய வேண்டிய புருஷார்த்தங்கள் என, தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் ஆகிய நான்கினை ஹிந்து தர்மம் வலியுறுத்துகிறது. இவை முறையே அறம், பொருள், இன்பம், வீடு என தமிழில் வழங்கப் பெறும். திருவள்ளுவர் தனது குறள் நூலை இந்த அடிப்படையிலேயே பகுத்து வழங்கியுள்ளார் என்பர். ஆயினும், அறம், பொருள், இன்பம் இவற்றை முப்பாலாக வழங்கிய வள்ளுவர், நான்காவதான வீடுபேறு குறித்து தனது நூலில் எங்கும் குறிப்பிடாதது ஏன் என்கிற கேள்வி எழுகிறது. அந்த வினாவுக்கு விடை காணும் முயற்சியே இந்நூல்.
திருக்குறளிலிருந்து 66 அதிகாரங்களையும் அவற்றில் இடம்பெற்றுள்ள 167 குறட்பாக்களையும் தேர்ந்தெடுத்து, அக்குறள்கள், அவற்றுக்கு உரையாசிரியர் கூறியிருக்கும் பொருள், அவர்கருத்து ஏற்கவியலாதது என்பதற்கான காரணம், அதன் உண்மையான பொருள் என்ன என்பதற்கான விளக்கம் என நுட்பமாக ஆய்வு செய்துள்ளார் நூலாசிரியர்.
உதாரணமாக, "உதவி வரைத்தன்று உதவி எனத்தொடங்கும் குறளுக்கு (செய்நன்றி அறிதல்) உரையாசிரியர்கள் கூறும் 'உதவி என்பது உதவிய பொருளைப் பொறுத்தது அன்று; அந்த உதவியைப் பெற்றவரின் தகுதியைப் பொறுத்தது' என்கிற பொருள் சரியானது அல்ல. உதவி பெற்றவரின் தகுதியை வாழ்க்கை நெறியால் அளக்க இயலாது. அத்தகைய தகுதி கல்வி அறிவா, செல்வமா, சமூக சிந்தனையா என்று பல்வேறு நிலைப்பாடுகளை எதிர்கொள்ள நேரிடும். இக்குறளில் வள்ளுவர் ஆன்ம நெறியினை வலியுறுத்துகிறார். இறைநாட்டத்தினை ஏற்கும் மனப்பக்குவம் பெற்றவர்களைத் தேடிச் சென்று உபதேசித்தல் இன்றியமையாதது. அது தகுதியுடையோருக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும்'' என்று விளக்கம் தருகிறார் நூலாசிரியர்.
இவ்வாறு குறளின் முப்பாலிலுமே வள்ளுவர் ஆன்ம ஞானத்தை வலியுறுத்துவதால், தனியே வீடுபேறு குறித்துப் பாடவில்லை என்பதே நூலாசிரியரின் முடிவு. தெரிந்த குறளுக்குத் தெரியாத விளக்கங்கள். ஏராளமான புதிய செய்திகள் உள்ளன.