Description
18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் 40 ஆண்டு காலமே வாழ்ந்த வள்ளல் பச்சையப்பரின் சரிதம், பச்சையப்பன் அறத்தின் முதல் தலைவர் கோ.சீனிவாச பிள்ளையவரால் ஆங்கிலத்தில் இயற்றப்பட்டு, மீள் பதிப்பாக தமிழில் வெளியிடப்பட்டுள்ளது. பச்சையப்பரின் கொடை வண்மை, வணிகத் திறன், அரசர்களுக்கு கூட கடன் அளித்த பாங்கு, ஆங்கிலேயர்களுடன் பணி-வணிக ரீதியான உறவு உள்ளிட்ட பச்சையப்பர் குறித்த ஆச்சரியமூட்டும் தகவல்கள் விரவிக் கிடக்கின்றன.
இரு மொழியாளுமை, வணிக அறிவைக் கொண்டு 19 வயது முதலே பச்சையப்பர் லட்சங்களைச் சம்பாதிக்கத் தொடங்கியதும், அந்த வருவாயை கோயில் திருப்பணிகள், தரும காரியங்களுக்கு வாரி வழங்கியதும் வியப்பு மேலிடும் செய்திகள். மரணிக்கும் நிலையிலும் ஓராயிரம் வராகன் கடனை உரியவரிடம் திருப்பிச் செலுத்திவிட முனைந்த பச்சையப்பரின் செயல் நேர்மைத் திறத்துக்கு ஓர் சான்று. வாழ்க்கை சரிதமாக மட்டும் அல்லாமல் 17, 18, 19- ஆம் நூற்றாண்டுகளின் சமூக பண்பாடுகள் உள்ளிட்ட சிறப்புக் கூறுகள் அடங்கிய ஆவணமாக மிளிர்கிறது இந்நூல்.
தான, தருமத்துக்கென செயல்பட்டு வந்த பச்சையப்பன் அறக்கட்டளை சீனிவாசப் பிள்ளை, அட்வகேட் ஜெனரலாக பொறுப்பு வகித்த ஜார்ஜ் நார்ட்டன் ஆகியோரது முயற்சியால், தென்னிந்திய மக்களின் கல்வி அபிவிருத்திக்கு ஈடுபடுத்தப்பட்டது திருப்புமுனை.
புலவர்கள் இயற்றிய புகழ்மாலைகள், தமிழறிஞர்களின் கட்டுரைகள் இணைக்கப்பட்டிருப்பது நூலுக்கு கூடுதல் சிறப்பு சேர்க்கிறது. கொடை எனும் அறப்பண்பு அருகி வரும் வேளையில் வெளிவந்துள்ள இந்நூல் இன்றைய தலைமுறைக்கு ஓர் அரிய கொடை.