Description
திருநெல்வேலி வட்டார வழக்கின் தனித்துவத்தை எழுத்து வழியாகத் தமிழ்நாடெங்கும் எடுத்துச் சென்றவர் சுகா. வட்டார வழக்கின் இனிமையை எழுத்து எந்த வகையிலும் சிதைத்துவிடக் கூடாது என்பதில் அதீத கவனம் கொண்டவர். பேச்சு வழக்கின் இனிமை என்பதன் இயல்பான ஒலியில் இருக்கிறது என்பதைத் தன் ஒவ்வொரு கட்டுரையிலும் சுகா அழுத்தமாகச் சொல்லி இருப்பதை, இந்த நூலில் உள்ள கட்டுரைகளில் மட்டுமல்ல, அவரது எந்த ஒரு கட்டுரையிலும் காணலாம். இன்னும் சொல்லப் போனால் அவரது எழுத்தின் அடிநாதமே இதுதான். சுகா மிகச் சிறந்த கதை சொல்லி. நல்ல பாரம்பரியமான உணவைத் தேடிச் செல்லும்போதும் சரி, தன் நட்புகளைப் பற்றிச் சொல்லும்போதும் சரி, அவர்களுள் உயர்ந்தவர் சாதாரணமானவர் என்கிற பாகுபாடின்றி உரிமையுடன் நகைச்சுவையாகப் பேசும்போதும் சரி, எல்லாவற்றையும் அவர் ஒரு கதைத்தன்மையுடன் சொல்வதை அவதானிக்கலாம். அதேசமயம் அந்தக் கதையில் எவ்விதச் செயற்கைத்தன்மை புகுந்துவிடக்கூடாது என்பதில் அவர் கொள்ளும் அக்கறையையும் கவனிக்கலாம். இயல்பான நகைச்சுவையே சுகாவின் மணிமகுடம். ஆனால், நமக்குத் தெரியாத நிலமொன்றில் புதைத்து வைக்கப்பட்டிருக்கும் கண்ணி வெடிகளைப் போல, எங்கே எப்போது ஒற்றை வரி தெறித்து நம் உறக்கத்தைக் குலைக்கும் என்பதைச் சொல்லிவிட முடியாது. சுகாவின் ஒவ்வொரு கட்டுரையையும் நம்மை ஊன்றி வாசிக்கச் செய்பவை, சுவாரஸ்யமும் நகைச்சுவையும் திடுக்கிடலும் கலந்த இந்த எழுத்து முறைதான். தாமிரபரணியைப் போலவே வற்றாத ஊற்றாக சுகாவின் எழுத்து முழுக்க இவற்றை நாம் பார்க்கலாம்.