Description
மகான்களின் வழியைப் பின்பற்றி, தூய மனதுடன், நாம் இறைவனை சிக்கெனப் பிடித்து, அவனை நோக்கி பயணிக்க வேண்டும். மகான்களின் வழியில் நடந்து, அவர்களது பெருமைகளை உணர்ந்து கொண்டால், அவர்களின் நடத்தை போன்றே நமது நடத்தையும் அமைந்துவிடும். மனிதரின் வாழ்க்கைப் பயணத்துக்கு உரிய விதிகளாக மகான்களின் வாக்கும் வாழ்வும் விளங்குகின்றன. அவர்களிடம் இருந்து கிடைக்கக் கூடிய படிப்பினைகள், நமது வாழ்வை சிறப்பாக்கும்.
சூரியன் பகலில் இருளைப் போக்குகிறார். தீபம் இரவில் இருளைப் போக்குகிறது. அதுபோல மகான்கள் இரவிலும் பகலிலும் நம் அஞ்ஞான இருளைப் போக்குகின்றனர். சூரியன் உப்புக் கடலில் இருந்து உப்பு நீரை எடுத்து, மேகத்தில் வைத்து, நன்னீராக மாற்றி மழையை பெய்விக்கிறார். மகான்கள், கடல் போன்ற நம் சம்பிரதாயங்களில் இருந்து, நமக்குப் புரியாத விஷயங்களை எடுத்துக் கூறி நம்மை தெளிவடையச் செய்கின்றனர். மேகங்கள் மழை பொழிந்து, பள்ளங்களை நிரப்புகின்றன. மகான்கள் குணத்தில் தாழ்ந்தோரை ஞானத்தால் நிரப்புகிறார்.
மகான்களை வணங்கி, அவர்களின் பொன்மொழிகளைக் கேட்க முயற்சித்தால், நாம் மெய்ஞானம் பெறுவது உறுதி. அருணோதயத்துக்குப் பிறகு சூர்யோதயம் ஏற்படுவதுபோல் மெய்ஞானம் கிடைக்கப் பெற்றதும், அவை சத்வ குணங்களாகவும், பக்தியாகவும், வைராக்கியமாகவும் மலர்ந்து நமக்கு மோட்சத்தை அளிக்கும்.
ஒரு மகான்/ஆச்சாரியர்/குருநாதரை அண்டி வாழ்பவரின் வாழ்க்கை தூய்மை உடையதாக இருக்கும். அவர் திருவடிகளின் கீழ் மெய்ஞானம் பெற்றால், இறைவன் நம்மை ஏற்கிறார். குருநாதரை அண்டாத நம் வாழ்க்கை, இறைவனை மதியாத வாழ்க்கையாகி விடுகிறது. குகனோடு ஐவரானோம் என்று ராமபிரான் கூறினாலும், குகன் தந்த பழங்களை அவர் ஏற்கவில்லை. ஆனால் சபரி தந்த பழங்களை ஏற்றார். காரணம், சபரி ஓர் ஆச்சாரியரை சரணடைந்து தூய வாழ்க்கை வாழ்ந்தவள். ஆனால் குகன் அவ்வாறு ஏற்றம் பெறவில்லை.
திருக்கச்சி நம்பிகள், காஞ்சி தேவப்பெருமானுக்கு ஆலவட்ட கைங்கர்யம் செய்து வந்தார். தனக்குள்ள சந்தேகங்களை தேவப்பெருமானிடம், திருக்கச்சி நம்பிகள், கேட்கும்போது, ‘தனக்கு மோட்சம் உண்டா?’ என்று வினவுகிறார். அப்போது பெருமாள், ‘ஆச்சாரியரை சரண் அடைந்தவருக்கே மோட்சம்’ என்று பதிலளிக்கிறார். உடனே திருக்கச்சி நம்பிகள் ஸ்ரீரங்கம் எழுந்தருளி, அங்கு ஆச்சாரியர்களை சரணடைந்தார்.