Description
தெய்வமாகக் கவி வான்மீகி முனிவர். கல்வியிற் பெரியவர் கம்பர். கம்பரை வான்மீகத்தோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் என்னும் ஆசை என்னுள் நெடுங்காலமாக இருந்து வந்தது. அந்த ஆசை 1986ஆம் ஆண்டு ஓரளவு இந்த நூல் மூலம் நிறைவேறியது.
வான்மீக விளக்கொளியில் கம்பரில் புதைந்து கிடக்கும் எத்தனையோ அழகுகள் வெளிப்படுகின்றன. வான்மீகத்தில் கண்டறியாதன பலவற்றை அதில் காண முடிகிறது...¬ வான்மீகத்தில் காணப்படும் கதை நிகழ்ச்சிகள் சில கம்பரில் விடப்பட்டுள்ளன.
கம்பநாடர், “அறம் வெல்லும் பாவம் தோற்கும்” என்பதனைத் தம் காப்பியத்தின் மையக் கருத்தாக-பாவிகமாகப்-படைத்துள்ளார். இத்தொடர், “சத்யமேவ ஜயதே ந அந்ருதம்” என்னும் மாண்டூக்கிய உபநிடதத்தில் வருவது. இதன் தமிழாக்கமே. “அறம் வெல்லும் பாவம் தோற்கும்” என்பதாகும்.
வான்மீகி தந்த பலாப்பழத்தைப் பிசினகற்றிச் சுளையெடுத்துத் தம் புலமை, மதிநலம் என்னும் தேனைப் பெய்து நூல்படிந்த மனத்தவர்க்குக் கம்பநாடர் காப்பிய விருந்து வைத்துள்ளார்.